டில்லி
நாளைய சந்திர கிரகணம் வடகிழக்கு இந்தியாவில் பகுதி கிரகணமாகத் தெரியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 26 அன்று அதாவது நாளை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் முழு சந்திர கிரகணம் என்றாலும் இந்தியா முழுமையிலும் காண முடியாது. இதை இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் மட்டும் அதுவும் பகுதி கிரகணமாக மட்டுமே காண முடியும். இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து, “நாளை அதாவது புதன் கிழமை, மே 26 அன்று வானில் முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இது இந்தியாவில் வட கிழக்குப் பகுதிகளில் (சிக்கிம் தவிர்த்து), மேற்கு வங்கத்தின் ஒரு சில இடங்கள், ஒடிசா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சில கடற்கரைப் பகுதிகளில் சந்திர உதயத்திற்குப் பிறகு, பகுதி சந்திரகிரகணம், குறுகிய காலத்திற்குத் தெரியும்.
மேலும் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிக்கா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடலை ஒட்டிய இடங்களிலும் இந்த சந்திர கிரகணம் தெரியும். இந்தியாவில் பகுதி சந்திர கிரகணம், இந்திய நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்குத் தொடங்கும்.
உலகெங்கும் முழு சந்திர கிரகணம், மாலை 4:39 மணிக்குத் துவங்கி, 4:58 மணிக்கு நிறைவடையும். இந்தியாவில் பகுதி சந்திர கிரகணம், மாலை 6:23 மணிக்கு முடிவடையும். இதற்கு அடுத்த சந்திர கிரகணம், 2021, நவம்பர் 19 அன்று இந்தியாவில் நிகழும். அதுவும் பகுதி சந்திர கிரகணமாகத் தெரியும்” என அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]