தூத்துக்குடி: உயிரிக்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறையினரின் கண்மூடித்தனமாக தாக்குதல் காரணமாக 13 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நாளை ஜூன் 22ந்தேதி , தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 3வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்நாளில், ஆலையை நிரந்தமாக மூடும் உத்தரவை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளியிடுமான என கேள்வி எழுந்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டியில் பலியான மற்றும் காயம் அடைந்த 16 குடும்பத்தினருக்கு திமுக அரசு அரசு பணி வழங்கியுள்ள நிலையில், ஆலையை மூடுவது குறித்தும் அறிவிக்க வேண்டும் என்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதில் தூத்துக்குடி மக்கள், தமிழக மக்கள், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், உறுதியாக உள்ளனர். ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என நினைத்து பசுமைத் தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்து வருகிறது.
தற்போது தினமும் 1050 மெட்ரிக் டன் உயிர் காக்கும் ஆக்சிஜன் வழங்குவதாக கூறி 10, 15 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யவே தடுமாறி வருகிறது. நூற்றுகணக்கான மக்கள் புற்று நோயில் மடிந்தும், பலமுறை விஷ வாயு கசிவு நடந்தும், துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்த பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முயற்சிப்பது 7 கோடித் தமிழர்கள் மற்றும் தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகளை அவமதிப்பதாகும்.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் வேதாந்தா தாமிர உருக்காலையை பாஜக, சிவசேனா கட்சியினர் உடைத்ததால் மூடப்பட்டது. தமிழக மக்கள் சட்டம், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து 24 ஆண்டுகளாக நீதிமன்ற படியேறி வருகின்றனர். இதைப் புரிந்து கொண்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் தானே ஆலையை அகற்றிக் கொள்ள வேண்டும்.
ஸ்டெர்லைட் நிர்வாகம் அதற்கு சம்மதிக்காவிட்டால் சுற்றுச் சூழலை நாசம் செய்த குற்றத்திற்காக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் குற்ற வழக்குகள் பதிவு செய்து ஆலை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 133-ன் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
எனவே, தூத்துக்குடிப் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான மே 22-ல் தமிழக முதல்வர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை
நிரந்தரமாக அகற்றவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாகவும், தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்குகளை திரும்ப பெறப்படும் என அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களின் ஆசையை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.