சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாகக்  விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்விலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவ்வப்போது உடல் பரிசோதனை செய்வதுடன், தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மே 19ஆம் தேதி அன்று  அதிகாலை, 3 மணியளவில், திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டதுடன்,  கொரோனா பரிசோதனையும்எடுக்கப்பட்டது. அதில், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்  ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார் எனக் கட்சித் தலைமை அறிவித்தது.

அதன்படி நேற்று மாலை சிகிச்சைக்குப் பின் நள்ளிரவு விஜயகாந்த் வீடு திரும்பியிருக்கிறார். விஜயகாந்தை கட்சியினர் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.