சென்னை: சென்னையில் நாளை (ஜன. 8) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை புத்தகக் காட்சியில் பங்குபெறும் நண்பர்கள், சாலையோர வியாபாரிகள் தங்களது பொருட்களை பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். குறுகிய கால மிக கனமழைப் பொழிவை கருத்தில் கொண்டு நாளை (ஜன. 8) அலுவலகங்கள் செல்பவர்கள் வீடுகளில் இருந்து பணி செய்வது சிறந்தது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கடந்த 2023 அக்டோபர் முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியும் மழை பெய்து வருகிறது. தற்போது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. மேலும், கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்:
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக மழை இன்று இரவு முதல் நாளை மாலை வரை பெய்யக் கூடும். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். விருதுநகர் மாவட்டம் மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் கூட அதிக மழை பெய்கிறது. தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்.
அப்போது எங்குதான் மிக கனமழை பெய்யும் என கேட்கிறீர்களா, மாஞ்சோலையை விடுங்கள், அங்கு சும்மாவே பெய்யும். நான் சொல்வது நம்ம சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை பற்றிதான். குறைந்த காற்றழுத்தமோ அல்லது புயலோ இல்லாத சமயங்களில் இது போன்ற மழை மிகவும் அரிது. கடந்த 2021 ஆம் ஆண்டு, நவம்பர் 21 ஆம் தேதியோ கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதியோ பெய்ததை போல் தற்போது பெய்யும்.
இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று வானிலை மிகவும் அருமையாக இருந்தது. எனவே மேற்கொண்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மழை பெய்யும். இந்த மாவட்டங்களில் 75 மி.மீ. முதல் 150 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே வேளையில் 150 முதல் 250 மி.மீ அளவுக்கு அதீத மழைக்கும் வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களான விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், ராணிப்பேட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், பாண்டிச்சேரியிலும் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மழை பெய்யும். ஆனால் மிக்ஜாம் புயலில் ஏற்பட்டது போல் வெள்ளம் வராது, அஞ்ச வேண்டாம்.
டிசம்பரிலேயே நாம் 24 மணி நேரத்தில் 400- முதல் 500 மி.மீ. மழையை பெற்றுவிட்டோம். எனவே இன்று இரவு பெய்யும் மழை மிக்ஜாம் புயலை போல் இருக்காது. ஆனாலும் 100 முதல் 200 மி.மீ. மழை பெய்தாலே சில இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. மேகக் கூட்டங்களை பார்த்தால் 100 மி.மீ ருக்கு குறையாமல் மழை பெய்யும் . அல்லது 200 மி.மீ மழை அளவைக் கூட தொடும்.
ஜனவரியில் மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை என்பது மிகவும் அரிதாகும். ஆனால் இந்த முறை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தாலும் கிடைக்கும். கடந்த ஆண்டு ஜனவரியிலேயே அவர்களுக்கு விடுமுறை கிடைத்தது.
மழை பெய்வது ஏன் தெரியுமா? தமிழகத்திலிருந்து வரும் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் ஒன்றாக சந்தித்துக் கொள்கிறது. இதனால்தான் வடதமிழகம், தெற்கு ஆந்திரா ஆகியவை ஹாட்ஸ்பாட்டுகளாக உள்ளன. இன்று இரவு பெய்யும் மழை திருப்பதி அல்லது சித்தூருக்கும் கிடைக்கும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்
ஆனால், தனியார் வானிலை ஆய்வாளர்கள், சென்னை உள்பட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். சென்னையில் இன்று நள்ளிரவு முதல் நாளை (ஜன. 8) இரவு 8 மணி வரை அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை குறுகிய காலத்தில் அதிக மழை (2-3 மணி நேரங்களில் 25 செ.மீ மேல்) பெய்யவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
வடகோடி மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் படிப்படியாக மழை துவங்கும். நாளை இரவு 8 மணிக்குள் பரவலாக அநேக இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதீத கனமழையும் பதிவாகும் எனவும், மிக்ஜம் புயல் போன்ற வெள்ளத்தை இம்மழை எற்படுத்தாது. குறுகிய நேரத்தில் அதீத மழை ஒருசில இடங்களில் பதிவாகக் கூடும். சாலைகளில் மழை நீர் தேங்கும், போக்குவரத்து பெரிதாக தாமதமாகும், பாதிப்படைய கூடும். தாழ்வான இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்படும்.
சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் இன்று மாலை முதல் நாளை இரவு வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம். சென்னை புத்தகக் காட்சியில் பங்குபெறும் நண்பர்கள், சாலையோர வியாபாரிகள் தங்களது பொருட்களை பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். குறுகிய கால மிக கனமழைப்பொழிவை கருத்தில் கொண்டு நாளை (ஜன. 8) அலுவலகங்கள் செல்பவர்கள் வீடுகளில் இருந்து பணி செய்வது சிறந்தது.