பாட்னா’

நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.  

ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையும், 2020-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துச் சந்தித்தார். பிறக் அவர் பாஜகவை விட்டு விலகி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ‘இந்தியா’ கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

அவருக்குச் சமீபகாலமாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் காணொலி காட்சி மூலம் நடந்த ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அத்துடன் சமீபகாலமாக பாஜகவுடன் நிதிஷ்குமார் நெருக்கம் காட்டி வருகிறார். எனவே அவர் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவுடன் இணைவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பீகார் மாநில பாஜக பொறுப்பாளர் வினோத் தாவ்டே பாட்னாவிற்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய பீகார் அரசியலின் பரபரப்பான சூழலில் பாட்னாவில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டுள்ளன. இவ்வாறு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அரசியல் நகர்வுகள் பேசுபொருளாகியுள்ள நிலையில் பாஜக செயற்குழு கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.