சென்னை: நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் நாளை நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுஉள்ளது.

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் அலுவலகம் முடிவு தெரிவிக்காமல் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்து வருகிறது. மேலும், இதுதொடர்பாக தமிழக எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டும், அவர் சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நீட் விலக்கு மசோதா தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று (6ந்தேதி) அறிவித்தார்.

அதன்படி, நாளை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள 10-வது மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில்  காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 13 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி,  தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம்

ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.