சென்னை:  சட்டமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் நாள் அமர்வு வினா – விடை நேரத்துடன் தொடங்கியது. கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை புத்தாண்டு கூட்டத்தொடர் 5ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 3-வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிலும் இன்று 2-வது நாள் கேள்வி – பதில் நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்படி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

தனது தொகுதி குறித்த கேள்வியை எழுப்புவதற்கு முன்பாக “தைத்திருநாள், பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்” எனக்கூறி தொடங்கினார் அரசு தலைமை கொறடா கோவி.செழியன்.

விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்துக்கழகம் அமைக்க உறுப்பினர் மார்க்கண்டேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், விளாத்திகுளத்தில் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500 ஆக உயர்த்த அரசு முன்வருமா? என்று உறுப்பினர் பொன்.ஜெயசீலன் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் அமைச்சர் ராமசந்திரன், தமிழ்நாடு தேயிலை தோட்டம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது, தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினசரி கூலி ரூ.500 ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது என தெரிவித்தார். தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி தினசரி ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா? என்று உறுப்பினர் ராஜா கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் காந்தி, சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

இதனை அடுத்து சட்டசபையில் கேள்வி – பதில் நேரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.