சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நாளை 71வது பிறந்தநாள். இதையொட்டி, மாநிலம் முழுவதும் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக தலைமை அறிவித்து உள்ளது. இதற்கிடையில், மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநிலம் முழுவதும் சிறப்பு பூஜைகள், அன்னதானம், ஏழை மக்களுக்கு உதவி என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை திமுகவினர் சய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, கோபாலபுரம் சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தி விட்டு, தாயார் தயாளு அம்மாள் மற்றும் ராசாத்தி அம்மாளை சந்தித்து ஆசி பெறுவதுடன், அறிவாலயத்தில் நிர்வாகிகள் மத்தியில் ‘கேக்’ வெட்டுகிறார். தொடர்ந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் நாளை நிகழ்வுகள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
பிறந்தநாளை முன்னிட்டு, தனது ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து கிளம்பும் முதலமைச்சர் ஸ்டாலின், காலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து வேப்பேரிக்கு வரும் முதலமைச்சர், அங்குள்ள பெரியார் திடலில் உள்ள ள பெரியார் நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர், தனது கோபாலபுரம் சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தி விட்டு தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெறுகிறார்.
இதைத் தொடர்ந்து, கருணாநிதியின் துணைவியார் வசிக்கும் சி.ஐ.டி. காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசி பெறுவதுடன், அங்குள்ள கலைஞர் படத்துக்கு மலர் தூவி வணங்குகிறார். கனிமொழியையும் சந்திக்கிறார்.
பின்னர், தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டுக்கு வந்து ‘கேக்’ வெட்டி குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதன் பிறகு காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்துக்குஎ வருகிறார். அவருக்கு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் நிர்வாகிகள் மத்தியில் ‘கேக்’ வெட்டுகிறார்.
இதையடுத்து, பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.
அதன்பிறகு கலைஞர் அரங்கத்துக்கு சென்று கட்சி தொண்டர்களை சந்திக்கிறார்.
முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள், சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சென்னை நோக்கி வரத்தொடங்கி உள்ளனர். இதனால், அண்ணா அறிவாலயம் பகுதியில் அதிக கூட்டம் கூடும் என்பதால், கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்துவதற்காக பாதுகாப்புகள் போடப்பட்டு உள்ளது. மேலும், கலைஞர் அரங்கத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள் பழத்தட்டுகள், மாலைகள், சால்வைகள், புத்தகங்கள், பரிசு பொருட்கள் கொண்டு வந்து வழங்குவார்கள் என்பதால் அவர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் கலைஞர் அரங்கத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.