சென்னை: ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற டோக்கன் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு உள்பட 21 பொருட்களுடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி, ஜனவரி 3ந்தேதி முதல்  அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு மஞ்ச பையில் மொத்தமாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 750 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளில் நாள், நேரம், குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தெரு வாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.