சென்னை

நேற்று முதல் நடந்த அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று நிறைவடைந்துள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் தேதிமுதல் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

தேர்தலில் பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ. 20 ஆயிரம், தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். கடந்த 6 ஆம் தேதியுடன் விருப்ப மனுக்கள் விநியோகம் விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்கும் கால அவகாசம் நிறைவடைந்தது.

தேர்தலில் போட்டியிட மொத்தம் 2 ஆயிரத்து 475 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அ.தி.மு.க. தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

நேற்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு எம்.ஜி.ஆர். மாளிகையில் நேர்காணல் தொடங்கியது. இரண்டு நாட்களாக நடைபெற்ற நேர்காணல் தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழுக் கூட்டம் கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.