சென்னை,

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமக்களின் மாமுல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

40 நாட்களுக்கும் மேலாக டில்லி ஜந்தர் மந்திரில் தமிழக விவசாயிகள் போராடி வந்தனர், அவர்களுக்கு ஆதரவாக தமிழக முழு அடைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் வணிகர் சங்க அமைப்புகள், ஆட்டோ டாக்சி ஓட்டுனர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

லாரி உரிமையாளர்கள், ஓட்டல் வணிக நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆங்காங்கே ஒருசில ரோட்டோர டிபன் கடைகளில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. அவர்களும் 9 மணிக்கு கடையை அடைத்துவிடுவதாக கூறினர்.

பந்த் தொடர்பாக இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்துக்கு சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னையில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ரெயில் நிலையங்கள், போக்குவரத்து பணிமனைகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போன்ற முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பந்த் எதிரொலியாக  சென்னையில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி உள்ளன. ஆளுங்கட்சி பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமே குறைவான அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்பு உதவியுடன் இயக்கி வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.