சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் இன்று காலை   அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை  செய்கிறார். பின்னர் 2 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதல்வராக பொறுப்பேற்ற பின் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால், திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக அமைதியாக கொண்டாடப்பட்ட அவரது பிறந்தநாள் இந்த முறை ஆர்ப்பாட்டமாக திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், என் பிறந்தநாளையொட்டி, தொண்டர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்றும், மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தார். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள் எனவும், வருங்கால தலைமுறைக்கு நம் லட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதோடு திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை மக்களிடம் விரிவாக எடுத்துரையுங்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் துயிலிற்றிருக்கும் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து  தந்தை பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் காலை 9 மணிக்குக்கு மேல் திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயம் வந்து கலைஞர் அரங்கத்தில் தொண்டர்களிடம் வாழ்த்து பெற உள்ளார்.  என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.