ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது.
பக்தர்களால் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நேற்று மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலை நம்பெருமாள் வந்தடைந்தார்.நேற்று இரவு 7 மணிக்குத் திருக்கொட்டாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபம் வந்தடைந்தார். ஆழ்வாராதிகள் மரியாதையுடன் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை வந்தடைந்தார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களின் கோவிந்தா…கோவிந்தா..ரங்கா …. ரங்கா… என்ற கோஷங்களுக்கிடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்பட பல்வேறு சிறப்புத் திருவாபரணங்கள் அணிந்து அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து துலா லக்கனத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார்.
பிறகு இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாகப் பரமபதவாசல் பகுதிக்கு வந்தார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழப் பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்துள்ளார். நம்பெருமாள் அங்கு சுமார் 1 மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதிக்க உள்ளார்.
பிறகு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 7.30 மணிக்கு எழுந்தருளுவார். இங்குக் காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை பொதுஜன சேவை நடைபெறும். நள்ளிரவு 12 மணி அளவில் திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு நாளை அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.