சென்னை: தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதையொட்டி, ‘துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று 1ம் வகுப்பு முதல் 10ம் வகப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளனர். முன்னதாக, பள்ளிகள் தூய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளித்து மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் வகுப்பறைகள் உள்ளன.
இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் ஐந்து நாட்கள் மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் (நீதி போதனை) நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், பள்ளி மாணாக்கர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிட்டுள்ளர். அதில், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள்.ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ – மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்!,
இவ்வாறு தெரிவித்துள்ளார்.