டில்லி

வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் அரசியல் தலைவர்கள் விடுதலை குறித்த மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.

மத்திய அரசு கடந்த வாரம் திங்கட்கிழமை அன்று காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை நீக்கியது. அத்துடன் மாநிலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. லடாக் பகுதி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் காரணமாக முன்னெச்சரிக்கையாகக் காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பலர் விட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோரும் அடங்குவர். மாநிலம் முழுவதும் தொலைபேசி மற்றும் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி அரசியல் ஆர்வலர் தேசீன் பூனாவாலா மனு ஒன்றை உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ளார். அந்த மனுவில் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடர்பு சாதனங்களும் முடக்கப்பட்டது குறித்தும் இதனால் காஷ்மீரில் வசிக்கும் மக்கள் குறித்து அவர்கள் உறவினர்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி அளிக்கப்பட்ட இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம் ஆர் ஷா, மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க மறுத்த அமர்வு விசாரணையை இன்று ஒத்தி வைத்தது. இன்று உச்சநீதிமன்ற அமர்வு இந்த மனுவின் மீது விசாரணை நடத்த உள்ளது.