டில்லி

பிரதமர் மோடி இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் செல்கிறார்..

இன்று காலை டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்கு பிரதமர் மோடி செல்கிறார். இன்று மாலை ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியச் சமூகத்தினரைச் சந்திக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மாலை நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளைப் பிரதமர் மோடி பார்க்கிறார். மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.

நாளை புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் பிரதமர் மோடி துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகிறார். அமீரக அதிபர், ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது  பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

அன்று மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் மற்றும் அதன் வளாகத்தை மோடி திறந்து வைக்கிறார்.  இந்தக் கோவில் தரைதளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

மோடி அந்தக் கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களைப் பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. பிரதமர் மோடி அன்று இரவு தனது அமீரக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து அபுதாபியில் இருந்து இந்தியா புறப்படுகிறார்.