டில்லி

போராட்டத்தில் கலந்து கொள்ள டில்லி வரும் விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு, 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர்.  விவசாயிகள் போராட்டத்தின் இறுதியில், வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை திரும்பப்பெற்றனர்.

2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இன்று டில்லி நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளன.  அழைப்பை ஏற்று, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டில்லிக்கு செல்ல உள்ளனர். இதில் பஞ்சாப் விவசாயிகள் மட்டும் 10 ஆயிரம் டிராக்டர்களில் செல்ல உள்ளனர்.

விவசாயிகள் டெல்லி செல்வதை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டில்லி எல்லை பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகியவற்றில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  மேலும் விவசாயிகளின் வாகனங்களைப் பஞ்சர் ஆக்கும்வகையில், சாலையில் ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன.

டில்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், காவல்துறை வாகனங்கள், ராட்சத கான்கிரீட் தடுப்புகள், கூர்மையான ஒயர்கள், முள்கம்பிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டில்லி – ரோதக் சாலையில் துணை ராணுவப்படையினரும் நிறுத்தப்பட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் சிங்கு எல்லையில் முழு நேரமும் கண்காணிக்கத் தற்காலிக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

டில்லி நகர காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா, அரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தை ஒட்டிய எல்லை பகுதிகளில் நேரில் சென்று ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். டில்லி புறநகர் காவல்துறை துணை ஆணைய ர் ஜிம்மி சிராம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

காவல்துறையினர் விவசாயிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட விவசாயிகளை அடைப்பதற்காக, 2 விளையாட்டு மைதானங்கள் தற்காலிக சிறைகளாக மாற்றப்பட்டுள்ளன.