டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள். இன்று இரவு 9மணி வரை மட்டுமே விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படுவதாக என தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் தகுதி தேர்வை எழுதுவது கட்டாயம். அதன்படி இந்த ஆண்டு நீட்  நுழைவுத் தேர்வுவருகின்ற ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக மே 20ந்தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று இரவு ம மணிக்குள் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்வில் உச்ச வயது வரம்பில் மாற்றம் கொண்டு வந்தது மட்டுமின்றி, பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  நீட் தேர்வில் கலந்துகொள்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 25 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30ஆகவும் இருந்தது. தற்போது வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், மருத்துவ நுழைவு தேர்வில் இந்தாண்டு போட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுமட்டுமின்றி நீட் தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு கேள்விகளில் சாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 45 கேள்விகளுக்குப் பதிலாக, இந்தாண்டு விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும். மாணவர்கள், அதில் ஏதெனும் 5 கேள்விகள் தவிர்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடைபெறுகிறது.

தேர்வின்போது, விண்ணப்பதாரர்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது. 180 கேள்விகளின் எண்ணிக்கை அப்படியே இருந்தாலும், கடந்த ஆண்டு 3 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது, இம்முறை கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வானது 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும்.

தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளின் கட்டணத்தில், 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்.

என்டிஏ நீட் தேர்வை 543 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடத்துகிறது. கடந்தாண்டுடன் 202 நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. கூடுத லாக, இந்தியாவிற்கு வெளியே 14 தேர்வு மையங்களையும் புதிதாக அமைத்துள்ளது.