நெட்டிசன்:
எழுத்து : வழக்கறிஞர் வீரசோழன் க.சோ.திருமாவளவன்
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான “ஜி.டி.நாயுடு” பிறந்த தினம் இன்று…..
அரசுப் பேருந்தில் செல்லவே அச்சமடைந்த ஒரு காலகட்டத்தில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே பேருந்துகளை இயக்கி அனைவரையும் அதிசயிக்கச் செய்தவர்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர்.
மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.
எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க (அதிர்வு சோதிப்பான்) என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர்.
ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. “பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்”.
அதற்கு அவர் கூறிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத் துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்’ என கூறினார்.
தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டவர்.
ஒரு துவரை செடி ஆறடி உயரமும் எட்டு அவுன்ஸ் துவரையும் கொடுக்கும் ஆனால் நாயுடு வளர்த்த செடி ஒரு மரமாக வே வளர்ந்தது அது 65 அவுன்ஸ் துவரை கொடுத்தது. ராட்சச செடிகளை பார்த்து பிரமித்த சர்.சி.வி.ராமன் இது “தாவரவியல் விநோதம்” என்று குறிப்பிட்டார்.
விவசாயத் துறையிலும் பல சாதனைகள் புரிந்தார். இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என பெயரிட்டு ஜெர்மன் கவுரவித்தது.
பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், பல தொழிற்சாலைகளைத் தொடங்கினார். தமிழக தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை எனப் போற்றப்பட்டார். நீரிழிவு, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்து தயாரித்தவர்.
இந்தியாவிலேயே முதன் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் உற்பத்தி தொழிற்சாலை இவரால் ஆரம்பிக்கப்பட்டது. பல தொழில் ஸ்தாபனங்கள் இவரை பின்பற்றின.
தற்போது வரைக்கும் கோவையின் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு வடநாட்டில் கிராக்கி உண்டு முக்கிய காரணம் அதன் உழைப்பு மற்றும் தரம்.
அவரின் நினைவைப்போற்றுவோம்.