சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப் பேரவையில் தெரிவித்து உள்ளார்.

சட்டப்பபேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அப்போது, கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று கூறியவர்,  அடுத்த நிதியாண்டில் 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

ஏற்கனவே செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மக்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசின் அனுமதியைப் பெற்று ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும்,  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று,  தேக்கம்பட்டி யிலும் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எரிசினம்பட்டியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடனும் செயல்பட்டு வருகிறது. எனவே, எரிசினம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.