டில்லி

ன்று (மே 21) முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் ஆகும்.

இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 27ஆவது நினைவு நாள் ஆகும்.   டில்லியில் உள்ள ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ராஜிவ் காந்தியைப் பற்றிய சில நினைவுகள் இதோ :

கடந்த 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நேருவின் மகள் இந்திரா காந்தி – பெரோஸ் காந்தி தம்பதியருக்கு மூத்த மகனாக ராஜிவ் காந்தி பிறந்தார்.   இவருக்கு சஞ்சய் காந்தி என்னும் சகோதரர் உண்டு.   இவரது தாத்தா நேருவைப் போலவே தந்தை, தாய் இருவருமே அரசியலில் இருந்தவர்கள்.    இவர் அரசியலை விட்டு வெகுகாலம் ஒதுங்கியே இருந்தார்.

வெளிநாட்டில் படிக்கும் போது உடன் படித்த இத்தாலியப் பெண்ணான சோனியாவை காதலித்து தாய் சம்மதத்துடன் இந்தியாவில் மணம் புரிந்துக் கொண்டார்.  இவர்களுக்கு பிரியங்கா, ராகுல் என இரு குழந்தைகள் உள்ளனர்.   அரசியலில் தீவிரமாக இருந்த சஞ்சய் காந்தி ஒரு விமான விபத்தில் மரணம் அடைந்தார்.   அதன் பிறகு தனது தாயாருக்கு உதவ இந்திய அரசியலில் ராஜிவ் நுழைந்தார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி அப்போதைய பாரதப் பிரதமரும் ராஜிவின் தாயாருமான இந்திரா காந்தி பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜிவ் காந்தி பொறுப்பேற்றார்.    அடுத்து நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ராஜிவ் காந்தி பிரதமர் ஆனார்.  இந்தியாவில் கணினி பயன்பாடு அதிகரிக்க ராஜிவ் காந்தியே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத் தக்கது.

அடுத்து நடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்ய ராஜிவ் காந்தி தமிழகம் வந்தார்.   ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற உள்ள கூட்டத்தில் அவர் பங்கேற்க வந்த போது நடந்த தற்கொலைப்படை குண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி பரிதாபமாக மரணம் அடைந்தார்.    அவர் மறைந்த போதிலும் இன்றும் கணினி உபயோகப்படுத்தும் அனைவரும் அவரை நினைக்காமல் இருக்க முடியாது.