சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ரு படத்தை வெளியிட முடியவில்லை என்பதற்காக ஒருத்தர் நாட்டை விட்டுபோவேன் என்று சொன்னார்.. இன்னொருவர், தன் படங்களுக்காக இரண்டு மாநிலங்களுக்கு நடுவில் நல்லவனாக காட்டிக்கொள்ள அவ்வளவு தில்லாலங்கடி வேலை செய்து கொண்டிருக்கிறார்

வரப்போகிற புதிய படத்தில் அரசியல் இருக்குமாம்.. ஆனா அரசியல் படம் கிடையாதாம்..அதாவது என்ன அர்த்தம்? ‘’அது வெறும் சினிமாத்தான் எல்லோரும் வந்து பாருங்க..அப்பத்தான் கல்லா கட்ட முடியும். நீங்க பாட்டுக்கு அரசியல் படம்னு ஒதுக்கிப் புடாதீங்க..அப்புறம் அரசியல் செய்யறேன்னு வெச்சி செஞ்சிடாதீங்க.. நான் இன்னும் உங்கள் அபிமானம் பெற்ற ஸ்டார்தான்’’என்று பவ்யமா சொல்கிறார்.

அரசியலுக்கு வரப்போகிறேன் என்று 22 வருடங்களாக சொல்லிக்கொண்டு மட்டுமே இருக்கும் ஒருவரால், தன் படங்களில் நிரந்தரமாய் எந்த அரசியல் குறியீட்டையும் தைரியமாய் வைக்க முடியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் நடிராக இருந்தபோதே திரையில் கட்சி அடையாளங்களை தவறாமல் பதிவு செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் அவரது துணிச்சலையும் தாராளமாக பாராட்டலாம்.

எம்ஜிஆரை வைத்து முதலமைச்சர் பதவி கனவுகாணும், பல நட்சத்திரங்களுக்கும் பர்ஸ்ட்டே பர்ஸ்ட் ஷோவிற்காக பல ஆயிரம் ரூபாயை அள்ளிவீசும் மேல் தட்டு ரசிகர்களுக்கும் ‘அரசியல்வாதி எம்ஜிஆர்’ என்ற ஆளுமையை பற்றி தெரியவே தெரியாது.

15 ஆண்டுகாலம் காங்கிரஸ் சிந்தனையில் ஊறிய எம்ஜிஆர், அண்ணா மற்றும் திராவிட உணர்வால் கவரப்பட்டு 1952ல் திமுகவில் இணைகிறார். முன்னணி நடிகராக வளர்ந்து வந்தாலும் திமுகவில் அதற்குமுன்பே திரையிலும் நாடக மேடைகளிலும் பிரச்சார பீரங்கிகளாக இருந்த நட்சத்திர பட்டாள வரிசையின் பின்னாடித்தான் அவரால் இருக்க முடிந்தது. நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி, எஸ்எஸ் ராஜேந்திரன், வளையாபதி முத்துக்கிருஷ்ணன், டிவி நாராயணசாமி போன்றார் என மிக முக்கியமான பட்டியல் உண்டு.

இந்தியாவிலேயே ஒரு நடிகர் முதன் முறையாக தேர்தலில் நின்று வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனது தமிழகத்தில்தான். 1962 ஆம் ஆண்டு தேனியில் திமுக சார்பில் வென்ற லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் படைத்த சாதனை அது.

திமுகவில் இருந்த நடிகர்கள் தங்கள் கட்சியின் சின்னம் கொடி, கொள்கைகள் போன்றவற்றை பகிரங்கரமாக அடையாளப்படுத்தினார்கள். மாற்றுக்கட்சிகளின் ரசிகர்கள் தங்கள் படங்களை காண வரமாட்டார்கள் என்று தெரிந்தும் துணிச்சலோடு கட்சிக்காக திரைத்துறையில் பணியாற்றினார்கள்.

சக்ரவர்த்தி திருமகள் (1957) படத்தில் எம்ஜிஆரின் பாத்திரத்தின் பெயரே உதய சூரியன் என்று வைக்கப்பட்டது. எம்ஜிஆர் முதன்முதலாய் தயாரித்து இயக்கி நடித்து  1958ல் வெளியிட்ட நாடோடி மன்னன் படத்தின் முதல் காட்சியிலேயே எம்ஜிஆர் பிக்சர்ஸ் பேனர் வரும். அதில் ஒரு ஆணும் பெண்ணும் திமுக கொடியை தூக்கிப்பிடித்தபடி இருக்க பேனர் அப்படியே சுற்றும்.. அதுதான் எம்ஜிஆர் திமுகமீது கொண்டிருந்த வெறிக்கான அடையாளம்.

திமுகவில் இருபது ஆண்டுகள் இப்படி இரண்டற கலந்திருந்த எம்ஜிஆர்தான்  1972 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

பல ஆண்டுகள் பாடுபட்ட ஒரு ஜிஎம், திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டு அலுவலகத்தை விட்டு நடுத்தெருவில் நின்றால் எப்படியோ, அப்படியொரு பரிதாப நிலைமை..

நேற்றுவரை ஒட்டி உறவாடிய திமுக தலைவர்களும் தமிழக  அரசும் இன்று அடியோடு பகையாளிகளாக மாறிவிட்ட பயங்கரம். உண்மையிலேயே மிரண்டுதான் போனார், ஆனானப்பட்ட அரசியல்வாதி கம் நடிகரான எம்ஜிஆரே.

ஆனாரும் உடனே ஒருமுடிவுக்கு வந்து துணிச்சலுடன் களமிறங்கியதில் அடுத்த சில தினங்களில் உதயமானதுதான் அதிமுக.

அதன்பிறகு எம்ஜிஆரின் தைரியத்தையும் உழைப்பையும் போராட்டக்குணத்தையும் பார்த்து உலகமே வியந்தது தனிக்கதை.

எம்ஜிஆர் அதிமுக ஆரம்பித்த சில தினங்களில் இதயவீணை படம் வெளியானது. ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாததால் அது வழக்கம்போல 100 நாட்களை கடந்து வெற்றிப்பட வரிசையில் அமைதியாய் போய் சேர்ந்தது..

ஆனால் பெரும் பொருட்செலவில் பல்வேறு வெளிநாடுகளில் முதன் முறையாக படம் பிடிக்கப்பட்ட எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம்தான் ஆட்சியாளர்களை யோசிக்க வைத்தது.

படத்தை வெளியே வரவிடாமல் முடக்கினால் அதிமுகவை நடத்தும் எம்ஜிஆர் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு ஆளாவார் என்று கணக்குப்போட்டனர் ஆட்சியாளர்கள்.. விளைவு?

எம்ஜிஆர் சொந்தமாக தயாரித்து இயக்கிய அவரின் கனவுப்படமான, உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசுக்கு தமிழகத்தில் தியேட்டர்கள் கொடுக்க உரிமையாளர்கள் பலரும் முன்வரவில்லை. எம்ஜிஆர் அத்தனை எதிர்ப்புகளையும் தன்னுடைய சொந்த முயற்சியால்தான் சமாளித்தார். தொடைநடுங்கிப்போய் ஆட்சியாளர்களிடம் சமரசம் செய்ய முயற்சி கூட எடுக்கவில்லை.

உலகம் சுற்றும் வாலிபன் வெளியானால் புடவையை கட்டிக்கொள்கிறேன் என்று சவால் விட்டார் அன்றைய மதுரை திமுக மேயரான முத்து.

சென்னையில் போஸ்ட்டர் விவகாரத்தில் கருணாநிதி அரசு திடீரென காட்டிய நெருக்கடியால் எங்குமே உ.சு.வா படப்போஸ்ட்டர்களை ஒட்ட முடியவில்லை..

ஆனாலும் சென்னை தேவிபாரடைஸில் படத்தை பார்க்க முன் பதிவுக்காக திரண்ட கூட்டத்தின் வரிசை இப்போது ஹாமில்ட்ன் பாலம் வரை நீண்டது.  25 நாட்களுக்கு மொத்த காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத்தீர்ந்து புதிய சாதனையை படைத்தது முன்பதிவு விவகாரம்

போஸ்டர்களுக்கு பதில், முதன் முறையாக வெளிநாட்டிலிருந்து ஸ்டிக்கர் விளம்பரம் அடித்து வரவழைக்கப்பட்டு ஓட்டப்பட்டு விளம்பரத்தில் புதுமையை புகுத்தினார் தயாரிப்பாளர் எம்ஜிஆர்.

இன்னொரு பக்கம் படப்பெட்டிகளை பாதுகாப்பாக தியேட்டர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பிரச்சினைகள் ஆரம்பமாகின.

படப்பெட்டிகளை பிடுங்கிக்கொண்டு ஓட காத்திருந்தவர்களை சமாளிக்க ஒவ்வொரு தியேட்டருக்கும் ஐந்தாறு ரூட்டுகளில் உ.சு.வா அனுப்பட்டது.. அதில் எது ஒரிஜினல் ரீல்பெட்டி என்பதை கண்டுபிடிக்கமுடியாமல் எதிரிகள் குழம்பிப்போனது தனிக்கதை..பலர் படப்பெட்டி என செங்கற்கள், கருங்கற்களை பெட்டிகளை கைப்பற்றி பல்பு வாங்கினார்கள்.

எனினும் போஸ்டர்களே ஒட்டப்படாமல் உலகம்சுற்றும் வாலிபன் ரிலீசாகி தமிழகத்தை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் மிரள வைத்தது.

படத்தின் டைட்டில் சாங்கான, நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் பாடல் ரசிகர்களை முறுக்கேற்றியது.. பாடலில் வரும்,,,


நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,
என்று வரிகள் ஒலித்தபோது தியேட்டர்களில் எழுந்த ஆவேசம் ஆட்சியாளர்களை வீழ்த்தும் பலத்திற்கு மேலும் வலு சேர்த்தது..

மூன்றே கால் மணிநேரம் துளியளவும் சுவாரஸ்யம் குறையாமல் எம்ஜிஆர் படத்தை நகர்த்திச்சென்ற விதத்தை பாராட்டாத பத்திரிகைகளே இல்லை.. வெளிநாட்டுக்காட்சிகள் அவ்வளவு அழகாக படமாக்கப்பட்ட விதத்தை திரையுலமே வியந்து வியந்து பேசியது..

ரசிகர்களின் நிலைமையை கேட்கவேண்டுமா? படத்தின் ஒன்பது பாடல்களும், ஐந்து சண்டைக்காட்சிகளும் திரும்பத்திரும்ப அவர்களை தியேட்டர் பக்கமே வாசம் செய்ய வைத்து விட்டது. படத்தைக்காண வந்த ரசிகர்களை ஆங்காங்கே ஒரு கும்பல் மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடிய சம்பவங்களுக்கு இடையிலும் இப்படியொரு வரலாறு.

இத்தனைக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அரசியல் வாடை அடிக்கும் காட்சிகளும் வசனங்களும் மிகமிகக்குறைவு. முருகன் என்கிற விஞ்ஞானியின்  ஆக்க சத்திக்காக அணுகுண்டு தயாரிப்பும் அதனை கைப்பற்றி நாசகாரம் செய்யத்துடிக்கும் வில்லனின் பயங்கர ஆக்சன்களும் என முற்றிலும் தமிழ் சினிமாவுக்கு புதிய களத்தில் அமைக்கப்பட்ட கதை..

ஆனால் அந்த படத்திற்குப்போய் ஆட்சியாளர்கள், அரசியல் காரணங்களுக்காக தொல்லை கொடுக்கப்போய், எம்ஜிஆரின் வழக்கமான வெற்றிப்படமாக இல்லாமல் அதையும்தாண்டி மிழக அரசியல் சரித்திரத்தையே மாற்றி அமைத்த திரைப்படமாகிப்போனது.

மூன்று வாரங்களுக்கு போஸ்டரே ஒட்டப்படாத நிலையிலும் தமிழ்நாட்டில் அதுவரை சினிமா உலகில் இருந்த வசூல் சாதனைகளை ஒரே வீச்சில் முறியடித்தது உ.சு.வா.

விடியற்காலைகளில் ஆரம்பிக்கும் காட்சிகள், கட்டுக்கடங்காமல் வரும் கூட்டத்தை சமாளிக்க நள்ளிரவை கடந்தும் ஓடும். ஓரிரு மணிநேரம் மட்டுமே திரையரங்கின் புராஜக்டர்களுக்கு ஓய்வு.. தொடர்  நகரங்களில் 100 நாட்கள்.. மாநகரங்களில் 25 வாரம் என ஓடி வசூலை வாரிக்கொட்டியது. வெளிநாடுகளில் அமோகமாக ஓடியது உலகம் சுற்றும் வாலிபன்.

தமிழகத்தில் தன்னை நம்பி கொடுத்த தியேட்டர்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டாலும் தன் சொத்துக்களை விற்றாவது ஈடுசெய்கிறேன் என்று எம்ஜிஆர் எடுத்த அந்த வாழ்வா, சாவா முடிவுக்கு கிடைத்த பலன் அது.

உலகம் சுற்றும் வாலிபனுக்கு காட்டிய அந்த நிஜமான வீரம்தான் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக எம்ஜிஆர் அனல் பறக்க அரசியல் நடத்த கைகொடுத்தது. ஆட்சியிலும் அமர்த்தி முதலமைச்சராக்கவும் வைத்தது.

சரியாக நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 1973 ஆண்டு இதே மே 11ந்தேதி உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியானது. ஒருவேளை நெருக்கடியை சமாளிக்க முடியாமல் எம்ஜிஆர் பின் வாங்கியிருந்தால் அவரின் அரசியல் எதிர்காலம் தடுமாற்றம் கண்டிருக்கலாம். ஆனால் ஒரு சினிமாவுக்கு கிடைத்த முதல் எதிர்ப்பையும் அற்புதமாக தகர்த்தெறியும் ஆற்றல், துணிச்சல் அவருக்கு இருந்தது.

இன்றைக்கு ஒரு படத்தை ஒட்டுவதற்காக அரசியல் அரசியல் என்று பம்மாத்து செய்யும் திரைப்பட நட்சத்திரங்களை பார்க்கும் போது, உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் போல இன்றைக்கு ஏற்பட்டால் வாய் விட்டு அழுவார்கள்..அல்லது ஆட்சியாளர்களிடம் மொத்தம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.