மீண்டும் ஐ பி எல் திருவிழா தொடக்கம் : ரசிகர்கள் மகிழ்ச்சி

Must read

துபாய்

ன்று சென்னை மும்பை அணி போட்டியுடன் மீண்டும் ஐ பி எல் திருவிழா அமீரகத்தில் தொடங்குகிறது.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று ஐபிஎல் தொடரில், 14ஆவது சீசன் தொடங்கியது.  இதில் முதல் பாதி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி கொரோனாவால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இதையொட்டி 2-வது பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு, போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இன்று ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் பரம எதிரிகளாகப் பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணியின் வீரர்களும் துபாயில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில், நட்சத்திர வீரர் டூபிளசி காயம் அடைந்துள்ள நிலையில் அவர் முதல் போட்டியில் பங்கேற்பாரா எனச் சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், விளையாடிய டூபிளசி காயம் காரணமாகக் கடைசி 3 போட்டிகளில் விளையாடவில்லை.

ரூத்துராஜ் கெய்க்வாட்டுடன், ராபின் உத்தப்பா அவருக்குக் களம் இறங்குவார் எனத் தெரிகிறது. இதைப்போல இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் சாம் கரண் புதன்கிழமை துபாய் வந்து சேர்ந்ததால், 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆகவே அவர் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார்.

நடப்பு சாம்பியனான மும்பை அணி தனது அசுர பலத்தோடு களம் காணக் காத்திருக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா, டி காக், பொல்லார்டு மற்றும் இளம் வீரர்கள் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சமீபமாகச் சரியாக விளையாடாத ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் “பார்ம்” மட்டுமே மும்பை அணியைப் பொறுத்தவரையில் கவலைக்குரியதாக உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் 30 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது. அடுத்ததாக விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 3-வது இடத்திலும், மும்பை நான்காவது இடத்திலும் உள்ளன. இன்னும் 27 நாட்களில், 31 ஆட்டங்கள் நடைபெறவிருக்கும் நிலையில், போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.

More articles

Latest article