சாகித்ய அகாடமி விருது பெறும் மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி

Must read

டில்லி

நேற்று வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளில் கன்னட மொழிக்கான விருது மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 20 மொழிகளில் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.   இது இந்திய மொழி எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய விருதுகளில் ஒன்றாகும்.   நேற்று 2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.   இதில் கன்னட மொழிக்கான விருது மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வரும். முதன்மை எழுத்தாளருமான வீரப்ப மொய்லிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கன்னட மொழியில் வீரப்ப மொய்லி எழுதும் கவிதைகள் மிகவும் புகழ் வாய்ந்தவை ஆகும்.   கட்சி பேதமின்றி இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.   இவருக்குக் கன்னட மொழி கவிதைத் தொகுப்பான “பாகுபலி அஹிம்சா திக்விஜயம்” என்ற நூலுக்கு அகாடமி விருது கிடைத்துள்ளது.   இந்த விருதில் ஒரு தாமிர பட்டயம், ஒரு சால்வை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம்  அளிக்கப்படுகிறது.

வீரப்ப மொய்லியுடன் கவிதாயினி அருந்ததி சுப்ரமணியன் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.  இவர் தனது ஆங்கில கவிதை தொகுப்பு நூலான “வென் காட் இஸ் அ டிராவலர்” என்னும் நூலுக்கு விருது பெற்றுள்ளார்.  தமிழ் மொழியில் இமையம் எழுதிய “செல்லா பணம்” என்னும் நாவலுக்கு விருது கிடைத்துள்ளது.

மற்ற மொழிகளில் ஹரிஷ் மீனாட்சி (குஜராத்தி), அநாமிகா (இந்தி), பாஸ்கர் (கொங்கணி), இருங்பம் தேவன் (மணிப்புரி), ரூப்தந்த் ஹன்சா (சாந்தலி), நிகிலேஸ்வர் (தெலுங்கு), நந்த காரே(மராத்தி), மகேஷ்சந்திர சர்மா கவுதம்(சமஸ்கிரதம்), ஆகியோர் விருதுகள் பெற்றுள்ளனர்.  சிறுகைதைகளில் அபூர்ப குமார் சைகிலா (அசாமீஸ்), மறைந்த தரணிதர் ஒநரி (போடோ), மறைந்த ஹிதய் கவுல் பாரதி(காஷ்மீரி), காலகனி ஜா (மைதிலி) மற்றும் குருதேவி சிங் ருபனா(பஞ்சாபி) ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.

இத்துடன் மொழி பெயர்ப்பு புத்தகங்களுக்கும் நேற்று 24 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதில் விவேக் ஷன்பாக் எழுதிய கன்னட நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஸ்ரீநாத் பேரூர் மற்றும் திருவள்ளுவரின் திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்த டி இ எஸ் ராகவன் ஆகியோர் அடங்குவர். மொழி பெயர்ப்புக்கான் விருதுகளில் தாமிர பட்டயம் மற்றும் ரூ.50000 ரொக்கம் அளிக்கப்படுகிறது.  இந்த விருதுகள் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.,

More articles

Latest article