திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இன்று தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது.

கடந்த 30ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  பிரம்மோற்சவத்தின் 5வது நாளான நேற்றிரவு முக்கிய வாகன சேவையான கருடசேவை உற்சவம் நடந்தது. இந்த உற்சவத்தில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகத பச்சை கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த கருடசேவையின் போது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த கலைஞர்கள் சுவாமியின் அவதாரங்கள், லீலைகள் குறித்த கலைநிகழ்ச்சிகளை மாடவீதிகளில் வரிசையாக நடத்தினர். பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி மாட வீதியில் வலம் வந்தார். அவ்வேளையில் சுவாமி வேடமணிந்து ஏராளமான கலைஞர்கள் நடனமாடினர். இதைக் காண மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

அதன் பிறகு 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாயார்களுடன் எழுந்தருளினார்.  ரதத்தை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.  திருப்பதி மாடவீதியில் இந்த ரத ஊர்வல வைபவம் நடைபெற்றது.   லட்சக் கணக்கானோர் தங்கத் தேரில் உலா வந்த சுவாமியை காண திரண்டனர். அவர்கள் `கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று இரவு கஜ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.