சென்னை,
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை எதிர்த்து, திமுக இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது.
இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
கடந்த 8ந்தேதி இரவு  ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததது. இதைத் தொடர்ந்து மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 24ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று (நவம்பர் 24 ) மாலை 4 மணி முதல் 5 மணி வரை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கிறது.
சென்னையில், மவுன்ட்ரோடு பெரியார் சிலையில் இருந்து தேனாம்பேட்டை அன்பகம்வரை தி.மு.க.வினர் ஒருவருக்கொருவர் கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக சாலையின் ஒரு பகுதியில் மட்டும்  அவர்கள் மனித சங்கிலி போராட்டம்  நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.‘
எதிர்க்கட்சி தலைவரும்,  தி.மு.க. பொருளாளருமான  ஸ்டாலின் மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த போராட்டத்தில்  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும்  பங்கேற்கின்றனர்.
மாவட்ட அளவில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.