டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக எம்பிக்கள் டெல்லியில் இன்று கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில்  காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்பதாக மாணிக்கம் தாக்கூர் எம்.பி. தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் மத்திய பாஜக அரசை கண்டித்து, இன்று  டெல்லி  நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டம் காலை 10 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, மத்திய  நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். அதுபோல நாடாளுமன்ற விவாதத்தின்போதும் திமுக எம்.பி.க்கள் இதுகுறித்து பேசினார். அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகனை அன்பிட் என டி.ஆர்.பாலு கூறியது சர்ச்சையானது. இதையடுத்து திமுக எம்.பி.க்கள்  வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பால,  பிப்ரவரி 8-ந் தேதி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்துவர்கள் என அறிவித்தார். அதன்படி இன்று காலை திமுக எம்.பி.க்களின் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில், திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு எதிரான பாரபட்சத்தை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்கின்றனர் என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மத்திய  நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகாலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே… என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?

மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் அவர்கள் குறிப்பிட்டி ருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 இலட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 இலட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.