திருச்சி

ன்று திருச்சியில் வேளாண்துறை நடத்தும் வேளாண் சங்கமம் விழாவை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் கடந்த 8ஆம் தேதி வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் வணிகத் திருவிழா நடந்தது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்திருந்தார். அப்போது மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட விளைபொருட்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, திருச்சியில் 3 நாள் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியை வேளாண்மைத்துறை நடத்த உள்ளது.  இந்த சங்கமம், வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு நடக்க உள்ளது.

இன்று திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். வரும் 29ஆம், தேதி வரை இந்த விழா 3 நாட்கள் நடக்கிறது. இன்று முதல்வர் வேளாண் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார்.

நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்த சங்கமத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீனத் தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள் கலந்துரையாடப்பட உள்ளது.