சென்னை
தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வு அறிவிப்பது குறித்து முதல்வர் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால் முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கை மிகவும் கடுமையாக்கினார். மே மாதம் 24 முதல் இரு வாரங்களுக்குத் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதையொட்டி பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு குறையத் தொடங்கியதால் இந்த மாதம் 7 ஆம் தேதியில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போதைய ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தமிழகத்தில் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்புக்கள் குறையாமல் உள்ளது. எனவே ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அத்துடன் தளர்வுகள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து சந்தேகம் உள்ளது. இது குறித்து இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.
இக்கூட்டத்தில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதன் பிறகு மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. அப்போது கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் எனத் தெரிய வந்துள்ளது.