வாஷிங்டன்

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு அளிக்க 50 கோடி டோஸ்கள் பிஃபிஸர் தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய உள்ளது.

பல உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.  தற்போது இரண்டாம் அலை பாதிப்பு ஓரளவு முடியும் நிலையில் உள்ள நேரத்தில் மூன்றாம் அலை  பரவல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.   எனவே அனைத்து உலக நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.   இவற்றில் ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை கடுமையாக உள்ளது.

இதையொட்டி ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உலக நாடுகளில் ஏழ்மையான நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வந்தன.  அவ்வகையில் சமீபத்தில் வந்த செய்தியில் இதற்காக 50 கோடி டோஸ்கள் பிஃபிஸர் நிறுவன தடுப்பூசியை அமெரிக்க அரசு கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்து வெள்ளை மாளிகை நிர்வாகம் மற்றும் பிஃபிஸர் நிறுவனம் ஆகியோர் எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்துள்ளனர்.  ஆனால் பைடன் தாம் இது குறித்து வரும் புதன்கிழமை அன்று பிரிட்டனில் தெரிவிக்க உள்ளதாகச் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.    அவர் செய்தியாளர்களிடம் இது குறித்து தம்மிடம் ஒரு திட்டம் உள்ளதாகவும் அதை அவர் அன்று அறிவிக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்த நடவடிக்கையால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைய வாய்ப்புள்ளதாகப் பல அமெரிக்க ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.   மேலும் அமெரிக்காவில் தயாராகும் தடுப்பூசிகளுக்கு பல உலக நாடுகளில் அவசர அனுமதி கிடைக்கவும்,  வேற்று நாட்டு தடுப்பூசிகளுக்கு அமெரிக்காவில் அனுமதி கிடைக்கவும் இது உதவி புரியும் எனவும் தெரிவித்துள்ளனர்.