டில்லி

நேற்று இரவு குழந்தைகளுக்கான சிகிச்சைக்கான வழி முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

முதல் அலை போல் இல்லாமல் இரண்டாம் அலை கொரோனாவில் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.    இது மூன்றாம் அலையில் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.  அதே வேளையில் டில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கலேரியா மற்றும் உலக சுகாதார மையத்தைச் சேர்ந்த சௌமியா சாமிநாதன் ஆகியோர் அதை மறுத்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வழிமுறைகளை நேற்று இரவு வெளியிட்டுள்ளது.

 அதில் காணப்படுவதாவது :

  • சிறிய அளவில் மற்றும் அறிகுறிகள் இல்லாத தொற்று உள்ள நிலையில் ஸ்டீராய்ட் மருந்துகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
  • இத்தகைய நிலையில் வேளைக்கு 10-15 மிகி பாரசிடிமால் மருந்து அளிப்பதன் மூலம் காய்ச்சல் குறைந்து தொண்டை சரியாகும்.   வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது இருமலைக் குறைக்கும்.
  • மத்திய அளவிலான தொற்று உள்ள நிலையில் ஆக்சிஜன் சிகிச்சை அவசியமாகும்.
  • அடிக்கடி வேறு சில நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளைத் தவிர மற்ற குழந்தைகளுக்கு இந்த நிலையில் ஸ்டிராய்ட் அளிக்கத் தேவை இருக்காது.
  • பாதிப்பு அதிகரித்து மூச்சுத் திணறல் அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு மூச்சு விடுவதற்கான சிகிச்சைகளை அளிக்கலாம்.  ரெம்டெசிவிர் மருந்து அளிப்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
  • நுரையீரலில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அதனால் மூச்சுவிடுவது கடுமையாகப் பாதிப்பு அடைந்திருந்தால் சுவாச மேலாண்மை சிகிச்சைகளைக் குழந்தைகளுக்கு அளிக்கலாம்.
  • 12 வயதுக்கு மேற்பட்டோர் கையில் ஆக்சி மீட்டர் பொருத்தப்பட்ட பெற்றோர் மேற்பார்வையில் நடைப்பயிற்சி செய்து ஆக்சிஜன் குறைபாடு சோதனை செய்யலாம்.