விறுவிறுப்பு தந்த அதிசய வரவு…. பகுதி -1

சிறப்புக் கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

மிதாப்பச்சன்.. இது வெறும் பெயரல்ல, உழைப்பு, தன்னம்பிக்கை, காதல் திருமணம், கூடாகாதல், மறுபிறப்பு, சொத்துக்கள் திவால் என நம்பமுடியாத ஆச்சர்யங்களை பின்னடக்கிய ஒரு வித்தியாச மான வரலாறு…

1969ல் அறிமுகமானவர் இன்றைக்கும் தலைமுறைகளை கடந்து ரசிக்கப்படுகிறார். பொதுவாக, திரைத்துறையில் ஒரு நட்சத்திரம் அபரிதமான இடத்தை பிடித்தாலும், அதை எப்பேர்பட்ட சூழலில் ஒரு நட்சத்திரம் பிடிக்கிறார் என்பதை பொறுத்தே அவர் திறமையை மதிப்பிடமுடியும்..வெற்றிடம் உருவானபோது வெற்றிபெறுவதெல்லாம் பெரிய விஷயமே அல்ல..

ஊமைப்பட காலம் முடிந்து பேசும்படம் காலம் ஆரம்பித்து வேகம் பிடித்தபோது, இந்தி சினிமாவை கட்டியாண்ட மூவேந்தர்கள் ராஜ்கபூர், திலீப்குமார் மற்றும் தேவ்ஆனந்த். சமமான போட்டி என்பதால் யார் நெம்பர் என கணிக்கமுடியவில்லை. இந்த சூழலில்தான் 1969 ஆம் ஆண்டு ஆராதனா படம் தந்த இமாலய வெற்றியால் ராஜேஷ்கன்னா ஒரே இரவில் இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராகி உச்சத்துக்கு போனார், தொடர்ந்து 15 படங்களை ஹிட் கொடுத்து அவர் படைத்த சாதனை, இன்றைக்கும் முறியடிக்கப்படவில்லை.

அப்படிப்பட்ட ராஜேஷ் கன்னாவின் இடத்தைத்தான் சில ஆண்டுகளில் தகர்த்து, சூப்பர் ஸ்டார் இடத்தை பிடித்தார் அமிதாப்பச்சன்..

1969ல் இயக்குர் மிருணாள் சென்னின் புவன் ஷோம்னே படத்தில் ஆரம்பகாட்சியில் கதையை விவரிக்க குரல் கொடுத்தார். இதே அமிதாப்பின் குரலெல்லாம் ஒரு குரலா என்று மிகப்பெரிய கவிஞனின் மகன் என்றும் பாராமல் ஆல் இண்டியா ரேடியோ துரத்தியடித்தது, அதற்கு முந்தைய சோகச்சம்பவம்.

சாத் இந்துஸ்தானி என்ற படத்தில் அறிமுகமானவருக்கு முதல் திருப்பம், ஆனந்த் படம்தான், சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கன்னாவின் மெகா ஹிட் படம். அதில் முக்கிய பாத்திரம் அமிதாப்புக்கு. பாத்திரம் நன்றாக பேச வைத்தாலும் கதாநாயகன் வாய்ப்பு மட்டும் வரவேயில்லை.

அந்த நேரத்தில் அமிதாப்புக்கு கைகொடுத்தது ஏதோ ஒரு வகையில் தமிழ் திரையுலகம்தான். ஒரு நேரத்தில் இரண்டு படங்களில் கதாநாயகன் வாய்ப்பு. ஒன்று மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தின் ரீமேக்கான பாம்பே டூ கோவா படம். இன்னொன்று ஜெமினி ஸ்டுடியோ தயாரித்து எஸ்எஸ் வாசன் மகன் பாலசுந்தரம் டைரக்ட் செய்த சன்ஜோக் படம். ஜெமினிகணேசன் சௌகார் ஜானகி நடித்து கே.பாலசந்தர் டைரக்ட் செய்த இரு கோடுகள் படத்தின் இந்தி ரீமேக். தன்னைவிட ஆறுவயது மூத்த நடிகையான மாலாசின்ஹாவிற்கு ஜோடியாக அமிதாப் நடித்த படம்.

பாம்பே டூ கோவா, சன்ஜோக் இரண்டுமே ஹிட் அடித்தன. இதற்கிடையில் வழக்கம்போல பல துண்டு ரோல்களில்… இத்தகைய சூழலில்தான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதையை தேர்வுசெய்து வைத்துக்கொண்டு பெரிய பெரிய நடிகர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் தயாரிப்பாளர் கம் டைரக்டரான பிரகாஷ் மெஹ்ரா.

ராஜேஷ் கன்னா, சசிகபூர், தேவ் ஆனந்த், தர்மேந்திரா என பல முன்னணி நட்சத்திரங்கள் வேண்டா மென்று நிராகரித்து விட்டனர், அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பழிவாங்கும் கதையை.  பிரகாஷ்  மெஹ்ரா வேறு வழியில்லாமல்தான் அரை மனதோடு அமிதாப்பை ஹீரோவாக போட்டார்.
1973 ஆண்டு மே 11-ந்தேதி.. தமிழ்நாட்டில் பெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திடும்வகையில் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய தெம்பையும் வெற்றியையும் தந்த உலகம் சுற்றும் வாலிபன் வெளியான அதேநாள்தான் அமிதாப்பின் சஞ்ஜீர் படமும் வெளியானது.

அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால். மும்பையில் படம் வெளியான அன்று, தியேட்டர்கள் முன்பு ஈயோடியது. காரில் டைரக்டரோடு வலம் வந்து பார்த்த ஹீரோ அமிதாப் உண்மையிலேயே நொந்து போய் கண்கலங்கிவிட்டார். முன்னணி நட்சத்திரங்கள் நிராகரித்த ஒரு கதையை தவறாக தேர்வு செய்துவிட்டோமே என இரட்டை மனது பாடாய் படுத்த ஆரம்பித்தது- ஆனால் நாலைந்து நாட்களில் எதிர்பாரதவிதமாய் திடீர் திருப்பம் ஏற்பட்டு, சஞ்ஜீர் படம் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது.

காரணம், அந்த படத்தில் ஸ்டைல், கோபம், கடமையுணர்ச்சி, நிதானமான காதல் என பல விதங்களில் கலந்து கட்டி அடித்த அமிதாப்பின் காட்சிகள் மெல்ல மெல்ல ரசிகர்களை ரிபீட் மோடில் தியேட்டருக்கு வரவழைத்தன. அநியாயத்தைக்கண்டு காட்சிக்கு காட்சி சீறியதால் அமிதாப்புக்கு ஆங்ரி யெங் மேன் என்ற புது பெயரையே சஞ்ஜீர் படம் பெற்றுத்தந்து அவரை திரையுலக ராக்கெட்டில் ஏற்றிவிட்டு விட்டது.

நடிகர் அமிதாப், சூப்பர் ஸ்டார் அமிதாப் என்ற அந்தஸ்த்தை பிடிக்க நீண்ட காலம் காத்திருக்கவில்லை சன்ஜீர் படம் அமிதாப்பிற்கு முதற்படி என்றால், தீவார் படம் இரண்டாவது பிளாக் பஸ்டர்.

மாஃபியாவாக மாறிவிட்ட அண்ணனை போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் தம்பியே சுட்டு கொல்லும் கதை. ஆனால் அதுவரை இந்தி படங்கள் காணாத அளவுக்கு டான் பாத்திரத்தை அமிதாப் படு ரிச்சாக வும் ஸ்டைலிஷாகவும் செய்தார். மது, புகை என வெஸ்டர்ன் டைப்பில் புழங்கும் ஒரு பெண்ணோடு திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தபடி கடத்தல் தொழிலை பார்ப்பது,, இன்னொருபக்கம் தனது விததைதாய் மீது அளவுகடந்த அன்பை பொழிவது,. இரண்டையுமே அமிதாப் செய்தவிதம் அவரிடமிருந்த விதவிதமான நடிப்பாற்றலை இந்தி திரையுலகிற்கு பறைசாற்றிவிட்டது.

காதலியைக்கொன்ற வில்லனை தீவார் படத்தில் அமிதாப் கொல்லும் விதம், அதுவரை ரசிகர்கள் காணாத ஒன்று. ரத்தவெள்ளத்தில் தன் மடியிலேயே உயிரை விடும் காதலியை கிடத்திவிட்டு, அப்படியே வில்லன் தங்கியிருக்கும் பலமாடிகள் கொண்ட ஸ்டார் ஹோட்டலுக்கு போவார், ரூம் கதவை உடைத்து வில்லனின் அடியாட்களை சுட்டபடியே எங்கடா உங்க பாஸ் என்று கேட்பார். தெரிந்தபின் அந்த அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வார்.

துப்பாக்கியால் சுடாமல். அதனை இடுப்பில் சொருகிக்கொள்வார், பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வில்லனை ஜட்டியோடு கட்டிலிலிருந்து தூக்கிக்கொண்டுபோய் அப்படியே ஜன்னல் வழியாக வீசி விடுவார். எல்லாமே சில விநாடிகள்தான். சித்ரவதை செய்யக்கூட நேரம் எடுத்துக்கொள்ள விரும்பாத அளவுக்கு கொலைவெறியை அப்படி பிரதிபலித்திருப்பார் அமிதாப்.

டான் ஆவதற்கு முன்பாக கூலித்தொழிலாளியாக இருக்கும் அமிதாப்பை புரட்டியெடுக்க நாயாய் தேடி அலைவார்கள் துறைமுக ரவுடிகள்.ஆனால் அமிதாப்போ, அவர்களின் குடோனுக்குள்ளேயே ஸ்டை லாக அமர்திருந்து, கதவை உள்பக்கம் பூட்டி சாவியை அவர்களிடமே கொடுத்துவிட்டு பின்னர் பொறுமையாய் வெளுத்து எடுப்பார். இப்படி எத்தனையோ காட்சிகள் தீவாரில்.

அமிதாப்பை அணுஅணுவாய் ரசிகர்களும் ரசிகைகளும் வெறித்தனமாய் நேசிக்க ஆரம்பித்த படம் தீவார். அந்த அளவுக்கு கிளாமர், ஆக்சன் தாய்ப்பாசம் சென்ட்டிமெண்ட் என துவம்சம், அதகளம், தாண்டவம் பட்டையை கிளப்புதல்.. எத்தனையோ வார்த்தைகளில் சொன்னாலும் ஈடாகாது. தீவாரையே தமிழில் தீ என ரஜினியை வைத்து செய்தார்கள். தீவார் பார்த்தவர்களால் அதைப்பற்றி இங்கே சொல்லமுடியாது.

தீவாருக்கு பிறகு ஷோலே படம். அதைப்பற்றி சொல்வது என்பது அமிதாப் என்ற பொன்குடத்திற்கு பொட்டு வைத்து அழகு பார்ப்பது மாதிரி. ஐந்தரை ஆண்டுகாலம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்த படம் ஷோலே..

அமிதாப்பிடம் வித்தியாசமான குணம் இருந்தது. தான் மட்டுமே முக்கியத்துவமாக தெரியவேண்டும் என்பதை தவிர்த்தார், அவர் படங்களில் எப்போதுமே நட்சத்திர பட்டாளம் இருக்கும். முன்னணி நடிகர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள் மத்தியில் நீச்சலடித்து தன் திறமையை காட்டுவார். தர்மேந்திரா, சசிகபூர், வினோத்கன்னா போன்றவர்களோடு அமிதாப் புகுந்து விளையாடுவார்
ஸ்டைல் ஆக்சன் போன்றவற்றோடு, சொந்தமாகவே காமெடித்தனத்தை சேர்த்துக்கொண்டு நடிக்க ஆரம்பித்தபின், அமிதாப் என்ற நடிகரை விரும்பாத ஆட்களே இருக்கமுடியாது என்ற நிலையை உருவாக்கினார். குழந்தைகள் முதல் பெரியவர்வரை அமிதாப்பின் பரம விசிறிகளாக மாறிப்போய்விட்டார்கள்.

டான் படத்தில், புலிமுகமூடியில் இருந்தபடியே , மே ஹு கோன் என பாடலின் ஆரம்பத்தில் கேட்க அமிதாப்பின் அடியாட்கள் மட்டுமா, டான்.. டான்.. என்று சொன்னார்கள்? ஒட்டு மொத்த இந்தியாவில் படம் பார்த்த ரசிகர்கள் அத்தனைபேருமே டான் டான் டான் என்றுதான் தங்களையும் மறந்து உற்சாகத்தோடு கத்தினார்கள்.

 

அமிதாப்பின் படங்கள் அந்த அளவுக்கு ஜனரஞ்சமாக இருந்தன. அதனால்தான், இந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ்கன்னாவிடமிருந்து அந்த பட்டத்தை ஆறே ஆண்டுகளில் அமிதாப்பால் பறிக்கமுடிந்தது. ஆக்சன் படத்தில் நடித்தாலும் பிளாக் பஸ்டர் காமெடிகலந்த ரோலில் நடித்தாலும் பிளாக் பஸ்டர். எழுபதுகளின் மத்தியில் தொடங்கிய அமிதாப் என்ற சூப்பர் ஹிட் சூறாவளியை ஒருவராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை

பில்லா, தீ, வேலைக்காரன் மிஸ்டர் பாரத், படிக்காதவன், பணக்காரன், சிவா, மாவீரன் பாட்சா, என ரஜினியின் வெற்றிப்படிக்கட்டுகளில் அமைந்த பல படங்கள் அமிதாப் படங்களின் ரீமேக்கே.
அமிதாப் படத்திற்கு தியேட்டர்கள் கிலோமீட்டர்கணக்கில் மட்டும் தவம் இருக்கவில்லை.. டிக்கெட் வாங்க நாட்கணக்கிலும் தவம் இருந்தார்கள். அப்படிப்பட்ட அமிதாப்பிற்கு பின்னாளில் நேர்ந்த சோதனைகள், கொஞ்ச நஞ்சமல்ல..
மரணப்போராட்டம், அரசியலில் அடி, சொத்துக்கள் திவால் என பயங்கரமான கட்டங்களை சந்தித்தார் அமிதாப்.

அடுத்த பாகத்தில் முடியும்..