திருவண்ணாமலை

நேற்று முன் தினம் தீபம் ஏற்றப்பட்ட திருவண்ணாமலையில் இன்று அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் நடைபெறுகிறது. 

கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன் தினம் மாலை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீபத்தைக் காண வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் நடந்து கிரிவலம் சென்றனர். தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு மகாதீபம் காட்சி அளிக்கும்.

இந்த கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் பக்தர்களைப் போன்று உண்ணாமுலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரரும் மகா தீபம் ஏற்றப்பட்டு உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். எனவே இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருகிறார்.  அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.