சென்னை

ன்றும்  கிளாமாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர் 

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஆம்னி பேருந்துகளும் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

நேற்று இரவு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் திடீரென அரசு பேருந்துகளைச் சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயணிகள் திருச்சிக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாகக் காத்திருப்பதாகப் புகார் தெரிவித்தனர்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பரபரப்புடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாகப் பயணிகளிடம் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் நேற்று உறுதி அளித்தனர்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இன்றும் தென் மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளுக்கு போதிய அளவில் பேருந்துகளை இயக்கவில்லை எனக் கூறி 2-வது நாளாகப் பேருந்துகளைச் சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், போதிய அளவில் பேருந்துகள் இல்லை எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

போராட்டத்தைத்  தொடர்ந்து பயணிகளிடம் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக 2-வது நாளாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பரபரப்புடன் காணப்படுகிறது.