சென்னை:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்துக்கு முன்னேறிய அவலம் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 716 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. இதில் தலைநகர் 510 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் மொத்த பாதிப்பு 4,882 ஆக அதிகரித்து உள்ளது. தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 427 பேர். பெண்கள் 288 பேர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.
இன்றைய தொற்று எண்ணிக்கையில் 71 சதவீதத் தொற்று எண்ணிக்கை சென்னையில் இருப்பதாகவும், இவை அனைத்தும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பு உடையது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துஉள்ளது.
தமிழகத்தின் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையான 8,718ல் சென்னையில் மட்டும் 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 55 சதவீதம் ஆகும்.
இன்று மேலும் 8 பேர் கொரோனாவால் பலியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 69% ஆக உள்ளது.
இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 83 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,134 பேர். டிஸ்சார்ஜ் சதவீதம் 24.4 சதவீதமாக உள்ளது.
சென்னையைத் தவிர மீதியுள்ள 16 மாவட்டங்களில் 206 பேருக்குத் தொற்று உள்ளது.
20 மாவட்டங்களில் இன்று தொற்று பாதிப்பு இல்லை.
இன்றைய நிலவரப்படி, டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 6,520 பேர்.
மொத்தம் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் எண்ணிக்கை 2,66,687. மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 2,55,584.
இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 11,788.
தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை, இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் தொடர்ந்து 2-ம் இடத்தில் 440 என்ற நேற்றைய எண்ணிக்கையுடன் இன்றைய 27 எண்ணிக்கையும் சேர்த்து 467 ஆக 2-ம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் கடலூர் இன்று 396 ஆக உள்ளது.
விழுப்புரம் அதற்கு அடுத்த இடத்தில் இன்று ஒரு தொற்று அதிகரித்து 299 என்கிற அளவில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடத்தில் இருந்த கோவையைப் பின்னுக்குத் தள்ளி காஞ்சிபுரத்தில் தொற்று எண்ணிக்கை 24 அதிகரித்து 156 ஆக உள்ளது.
கோவையில் 146, பெரம்பலூரில் 132, மதுரையில் 121, திருப்பூரில் 114, திண்டுக்கல்லில் 111 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. இன்று புதிதாக திருவண்ணாமலையில் தொற்று எண்ணிக்கை 13 அதிகரித்து 105 ஆக மூன்று இலக்க எண்ணிக்கையில் நுழைந்துள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.
17 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது.
மற்ற 20 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 487 பேர். இதில் ஆண் குழந்தைகள் 261 பேர். பெண் குழந்தைகள் 226 பேர்.
13 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் 7,635 பேர். இதில் ஆண்கள் 5,216 பேர். பெண்கள் 2,416 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3 பேர்.
60 வயதுக்கு மேற்பட்டோர் 596 பேர். இதில் ஆண்கள் 371 பேர். பெண்கள் 225 பேர்.
சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 33. ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் 4. கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் 20 பேருக்குத் தொற்று உள்ளதால் பச்சை மண்டலத்தை இழந்தது.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதுநாள் வரை 2வது இடத்தில் குஜராத் இருந்து வந்தது. ஆனால், இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளி தமிழகம் 8,718 எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தை கைப்பற்றி உள்ளது. இதனால் குஜராத் 3வது இடத்திலும், டெல்லி 4வது இடத்திலும் உள்ளது.