download (1)
குன்றக்குடி அடிகளார் பிறந்ததினம்
யிலாடுதுறையை அடுத்த நடுத்திட்டு என்ற கிராமத்தில் சீனிவாசன் – சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு  11.07.1925 அன்று பிறந்தார் குன்றக்குடி அடிகளார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். சிறு வயதிலேயே  தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் பழக்கத்தால் தமிழ் ஆர்வம் ஏற்பட்டது.
பள்ளிப்படிப்பினை முடித்த பின்பு தருமபுரம் ஆதீனத்தில் கணக்கராக வேலைக்கு சேர்ந்து பணியாற்றினார். அப்போது இவரது ஆற்றலைப் பார்த்த தம்பிரான் இவரைத் துறவறம் பூண வேண்டினார்.  அதனை ஏற்று யாத்திரைகசாயம் (காவித்துணியை பூசை மடத்தில் வைத்து எடுத்து உடுத்திக் கொள்ளச் செய்வதாகும்.) பெற்று கந்தசாமித் தம்பிரான் என்று பெயர் பெற்று பணியாற்றினார். பிறகு குன்றக்குடி மடத்தில் இருந்து மிகவும் வேண்டி அழைத்ததால் அங்கு சென்று மடத்தின் தலைமைப் பொறுப்பினை 1949 ல் ஏற்றார்.
திருவேட்களம் என்ற ஊரில் வாழும்போழுது விபுலானந்த அடிகளுடன் தீண்டாமை ஒழிப்பு நிகழ்வுகளில் ஈடுபட்டார்.
ஒருமுறை காலில் செருப்பு இல்லாமல் ரசாயன ஆலை ஊழியர்கள் இருந்த பொழுது அவர்களை செருப்பு அணிந்து பணி புரியுமாறு வேண்டிக்கொண்டார். ஊழியர்கள் இது குறித்து கேட்டபோது, “தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்குச் சென்ற போது அவர்களின் துன்பத்தை நானும் உணரும் வகையில் வெறுங்காளுடனே நடந்து சென்றேன். பிறகு அதையே பழக்கமாக்கிக் கொண்டேன். இப்போது என் நடைமுறையில் அனைத்தும் நடையன் (செருப்பு) போடாமல் தான்.” என்றார்.
 
தமிழகத்தில் மத ரீதியான மோதல் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் அடிகளார். ஆன்மிகவாதியாக இருந்தாலும் “எல்லோருக்கும் எல்லாமும்” என்ற பொதுவுடமைச் சித்தாந்தத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தார்.  குன்றக்குடி கிராமத்தில் மக்கள் இணைந்து தொழிலும் விவசாயமும் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.
இவரது பணிகளை அறிந்த அப்போதைய சோவியத் யூனியன் அரசு இவரை சிறப்பு விருந்தினராக தனது நாட்டுக்கு அழை்த்தது. அந்நாட்டின் செயல்பாடுகளை நேரடியாக அறிய, சோவியத்தின் தலைநகர் முழுதும் சைக்கிளிலேயே சுற்றிவந்தார் அடிகளார்.
நாடு திரும்பிய அவரிடம், “சோவியத்திலும் ஏழ்மை இருந்தது. புரட்சி வெடித்தது. இங்கும் ஏழ்மை நிலவுகிறது. புரட்சி ஏற்படவில்லையே..” என்று கேட்டனர். அதற்கு அடிகளார் சொன்னார்: ” ஏழ்மை இருப்பதாலேயே புரட்சி ஏற்பட்டுவிடாது. ஏன் அந்த ஏழ்மை ஏற்பட்டது என்று சிந்திக்கும் மக்களால்தான் புரட்சி ஏற்படும்.  சோவியத் மக்கள் அப்படிச் சிந்தித்தார்கள்!”
மனிதநேயம் மிக்க  அடிகளார்,  தந்தை பெரியார், தோழர் ஜீவனந்தம் ஆகியோருடனும்   இணைந்து சமூகப் பணியாற்றினார்.  மனித நேய பண்பாளராய் விளங்கிய அடிகளார் 14.04.1995 அன்று மறைந்தார்.