‘கோயில்களை காப்போம்’ என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள கோயில்களை எல்லாம் இந்து சமய அறநிலையத்திடம் இருந்து மீட்கப்போவதாக கோஷம் எழுப்பி வரும் ஜக்கி வாசுதேவுக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
1927 ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கிய நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவருமான சர் பி.டி. ராஜன் அவர்களின் பேரனான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தர்.
அதோடு, 1950 ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்த மூல விகிரகத்திற்கு பதிலாக புதிய விக்கிரகத்தை வழங்கியவரும் பி.டி.ராஜன் என்பது வரலாறு, இன்றளவும் பி.டி.ஆர். அவர்கள் வழங்கிய ஐயப்பன் சிலையே மூலஸ்தானத்தில் வழிபாட்டுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துமதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்துள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஈஷா யோகா மைய்யத்தின் ஜக்கி வாசுதேவ் எழுப்பி வரும் கோஷம் குறித்து ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஜக்கி வாசுதேவின் இந்த திட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்திடம் இருந்து கோயில்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையே முட்டாள்தனமானது, சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இதுபோன்ற ஒரு கோஷம் எழுப்பப்படுகிறது.
கடவுளை மட்டுமே வழிபட்டு கடவுளை பிரதானமாக நினைக்கும் ஒருவருக்கு, 5 லட்சம், 50000 மற்றும் 5000 என்று பல கட்டணங்களில் பார்வையாளர்களை அனுமதித்து பிரபலங்களுடன் சிவராத்திரி விழா கொண்டாடும் எண்ணம் ஏற்படுமா ?
அவர் வணிக ரீதியாக செயல்படுபவர். கோயிலை மீட்டு அதை நிர்வகிக்கும் உரிமையை சாமானிய பக்தனிடம் வழங்கவாரா என்றால் அதற்கு அவர் பதிலளிக்க மாட்டார். கோயில்களை பாதுகாப்பதாகக் கூறி தனது வியாபாரத்தை விரிவுபடுத்துவதே அவரின் நோக்கம்.
சாமானியனுக்கு உரிமை வழங்குவார் என்றால் அதே ஊரை சேர்ந்த நபருக்கு வழங்குவாரா ?
அல்லது, அந்த கோயிலில் உள்ள கடவுளின் தீவிர பக்தராக இருக்கும் அதே ஊரில் பிறந்து வேறு ஊரில் வசிப்பவரிடம் தருவாரா ?
கோயில்களை நிர்வகிக்க அறக்கட்டளை அல்லது சங்கம் அமைக்கப்போகிறாரா ?
அதை எந்த சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்வார் ?
அதன் உறுப்பிர்கள் மற்றும் நிர்வாகிகளாக யாரை தேர்ந்தெடுப்பார்கள் ?
நிர்வாகிகள் எத்தனை காலம் பதவியில் இருப்பார்கள், ஆயுள் முழுவதுமா ?
என்று சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன். ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்தும், வரவு செலவு குறித்து தணிக்கை துறையினர் எழுப்பி இருக்கும் சந்தேகங்கள் குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை விசாரணை மேற்கொள்ளும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறி இருப்பதால், ஜக்கி வாசுதேவின் இதுபோன்ற முட்டாள்தனமான அறிவிப்பு குறித்து அதிகம் பேசவிரும்பவில்லை என்று கூறினார்.