2021 புத்தாண்டு பிறந்த சில தினங்களில், கரூர் நகரத்திற்குள் மிக மோசமான முறையில், ஒரு ஆணவப் படுகொலை நடந்தேறியுள்ளது. இது கலப்பு திருமணத்திற்கு முன்னரே, சாதி மீறிய காதல் காரணமாக நடைபெற்ற ஆணவப் படுகொலை என்றாலும், மிக தைரியமான முறையில், ஒரு குழுவாக சேர்ந்துகொண்டு, கரூர் நகரத்தின் முக்கியப் பகுதியில், 30 நிமிடங்கள் அவகாசம் எடுத்துக்கொண்டு, சாதியின் பெயரைச் சொல்லி, நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த, பொறியியல் பட்டதாரியான ஒரு 23 வயது இளைஞர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த இளைஞர் காதலித்து வந்த சாதி இந்து பெண்ணின் குடும்ப உறுப்பினர்களே முன்நின்று இந்த அட்டூழியத்தை நிகழ்த்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் நடப்பது ஒன்றும் புதிதில்லைதான். அதேசமயம், இது சற்று வித்தியாசமான படுகொலை!
சில மாதங்கள் முன்பு, பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸில், ஒரு தலித் பெண், தாகூர் சமூக ஆண்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அப்போது, தமிழகத்திலிருந்து கண்டனக் குரல் எழுப்பிய சில சமூக செயல்பாட்டாளர்கள், “தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் நடக்குமா? இது பெரியாரின் மண்!” என்ற வகையில், சற்று பெருமை பேசினார்கள்.
இதுமட்டுமல்ல, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், தேனி தொகுதியில் பாஜகவுக்கு நெருக்கமான பன்னீர் செல்வத்தின் மகன் வென்றபோதும், அதிமுக ஆட்சி நீடிப்பதற்கான 9 சட்டமன்ற இடங்கள் அக்கட்சிக்கு கிடைத்தப்பிறகும் கூட, “இது பெரியார் மண்; இங்கேயெல்லாம் மோடி வித்தை பலிக்குமா?” என்று பேசினார்கள்.
இதற்கு முந்தைய 2014 மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி, தருமபுரியில் சாதியை வைத்தும், கன்னியாகுமரியில் மதம் & சாதியை வைத்தும் மொத்தம் 2 தொகுதிகளில் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் பெரியார் மண்! இதெல்லாம் அறிவார்ந்த, முற்போக்கான மற்றும் சமூகநீதி மண்! இங்கேயெல்லாம் பெயருக்குப் பின்னால் யாரும் சாதியைப் போட்டுக் கொள்வது கிடையாது என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றனர் பலர்..!
தமிழ்நாட்டில், பெயர்களுக்குப் பின்னால், நிறைய கவுண்டர்களையும், நாடார்களையும், தேவர்களையும், பிள்ளைகளையும், நாயக்கர்களையும், படையாட்சிகளையும், நாயுடுகளையும், செட்டியார்களையும், முதலியார்களையும், ரெட்டியார்களையும் இன்னும் பலரையும் நம்மால் அதிகம் காண முடியும். என்னவொரு வித்தியாசம் என்றால், பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இந்த சாதிப்பட்டம் குறைவு, அவ்வளவுதான்!
இன்னொரு அம்சத்தைக் குறிப்பிட வேண்டுமென்றால், அரசியல், சினிமா போன்ற பொதுவெளியில் செயல்படுபவர்கள், இன்றைய நிலையில், தமிழகத்தில், தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டங்களை வைத்துக்கொள்வதில்லை என்பது பெரிய வித்தியாசம்தான்! (அதேசமயம், நிகழ்காலத்தில் அதில் சில விதிவிலக்குகளும் உண்டு) ஆனால், முந்தைய காலங்களில், தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் சினிமா வெளியில் இயங்கியவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டங்களை சூட்டிக் கொண்ட உதாரணங்களை அதிகம் காணலாம். இந்த முந்தைய காலம் என்பது, சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூக இயக்கங்கள் மேற்கொண்ட சாதி ஒழிப்பு பிரச்சாரத்திற்கு பிந்தயவை என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
தமிழகத்தில், கடந்த 1963ம் ஆண்டுவரை உயிருடன் இருந்த ஒரு தென்மாவட்ட அரசியல் தலைவரின் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதிப்பட்டம் மிகப் பிரபலமானது. இன்றளவும், அந்த தலைவர், இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் உள்ளிட்ட அனைவராலும், பொது வெளியில் சாதிப் பட்டத்துடனேயே அழைக்கப்படுகிறார். அந்தளவிற்கு பயம்..!
ஆணவக் கொலைகள் மற்றும் தலித் பெண்கள் வன்புணர்வு என்று எடுத்துக்கொண்டாலும் தமிழகத்தில், எப்போதும் அதற்கெல்லாம் பஞ்சமிருந்தது கிடையாது. தலித் பெண்கள் வன்புணர்வு படுகொலை செய்திகள், சமீப நாட்கள் வரை வெளிவந்துள்ளன. அடுத்ததாக, எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம். இன்னும் சொல்லப்போனால், இத்தகைய கொடுமைகள் பெரியளவில் ஊடக வெளிச்சம் பெறுவதில்லை என்பதுதான் உண்மை. எனவே, மக்கள் எளிதாக அவற்றையெல்லாம் மறந்து விடுகிறார்கள்.
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது!
சாதிப் பெருமைகளை மையமாக வைத்து, தமிழகத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன மற்றும் வெளிவந்த வண்ணம் உள்ளன!
தமிழகத்தில் தீண்டாமை சுவர்கள் மிகப் பிரபலம்! தமிழக சாதிக் கலவரங்களைப் பற்றிய வரலாறு எழுதினால், அப்புத்தகம் பெரிதாகவே இருக்கும்! அவ்வப்போது ஏற்படும் சின்ன சின்ன சாதிய மோதல்களும், அதுசார்ந்த கொலைகளும் பதியத்தக்கவை. சாதிய உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய அமைப்புகள் இங்கு பல உள்ளன. அவற்றில், தேர்தல் அரசியலில் ஈடுபடுபவை மற்றும் ஈடுபடாதவை என்ற வகைப்பாடும் உண்டு.
சுடுகாட்டிற்கு செல்லும் வழிப் பிரச்சினை, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பகுதியின் வழியே செல்லக்கூடிய சாலையில் பாதுகாப்புக் கருதி வேகத்தடை அமைத்தால், அதைப் பெயர்த்துவிட்டு, சம்பந்தப்பட்ட மக்கள் மீது சூத்திரசாதி குழுக்கள் தாக்குதல் நடத்துவது, தலித் மக்களுக்கான தண்ணீர் பிரச்சினை, சாமி ஊர்வலங்கள் மற்றும் திருவிழாக்களில் தலித் மக்கள் புறக்கணிக்கப்படுவது உள்ளிட்டவையும் பிரபலம். தமிழ்நாட்டு கிராமங்களில், நிலமானிய சாதிய அமைப்புகளை இன்றும் வெளிப்படையாக காணலாம்! தமிழ்நாட்டின் கிராமங்களில் ஊர் தெருக்களும், சேரி தெருக்களும் இன்றும் தனிதனிதான்! ஆனால், அதேசமயம் வேறுசில விஷயங்களில் நெகிழ்வுத்தன்மை உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.
மலம் சுத்தம் செய்தல், குப்பை அள்ளுதல் உள்ளிட்ட கொடுமையான வேலைகளை செய்யக்கூடிய சுகாதாரப் பணியாளர்கள் என்ற வகைப்பாட்டில், தமிழ்நாட்டில், குறிப்பிட்ட சாதிகளின் மக்களே தற்போதும் இருந்து வருகின்றனர்!
தமிழ்நாட்டில், மீத்தேன், ஸ்டெர்லைட், அணுஉலை மற்றும் எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பல ஆபத்தான திட்டங்களுக்கு எளிதாக அனுமதி கிடைத்துவிடும். கெய்ல் குழாய் பதிப்பு விஷயத்தில், தமிழகத்திற்கு விசேடமான அநீதி இழைக்கப்படும்.
இந்த மாநிலத்தில், பிராமணரல்லாத முற்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் என்று அனைத்துப் பிரிவுகளிலும் சாதிய உணர்வுகளுக்குப் பஞ்சமில்லை. அந்தப் பிரிவினர், தங்கள் வகைப்பாட்டிற்குள்ளேயே சாதியத் தீண்டாமையை கடைப்பிடிப்பதற்கு தயங்குவதில்லை. மேலும், பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்டப் பிரிவினரை கீழானவர்களாக கருதும் மனப்போக்கு தமிழ்நாட்டிலும் உண்டு!
தமிழகத்தின் தேர்தல் அரசியலே சாதிமயப்பட்டுத்தான் இருக்கிறது. காமராஜர் காலத்தில் தூவிப் பேணப்பட்ட விதை, ஜெயலலிதாவின் காலத்தில் தளைத்து கிளைத்து வளர்ந்து நின்றது.
தமிழக ஊடகங்களில் பல சாதியமயப்பட்டவை. தேர்தல் காலங்களிலும் சரி, தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சிகளுக்கு ஏற்ப செய்திகளை வெளியிட்டு மறைமுக பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடியவை.
அறிவார்ந்த வாக்காளர்கள் என்று பலரால் முத்திரைக் குத்தப்படும் தமிழக வாக்காளர்கள், நடுநிலை ஊடகங்கள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரங்கள், ஓட்டுக்கு கிடைக்கும் பணம் மற்றும் சாதிய உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களிப்பதில் பிரபலமானவர்கள்!
தமிழகத்தில், சில தலைவர்களின் சிலைகள் அடிக்கடி சேதப்படுத்தலுக்கு ஆளாகக்கூடியவை! மிகப்பல இடங்களில் அம்பேத்கரின் சிலை கூண்டுக்குள் இருக்கக்கூடிய அவலம்தான் இம்மாநிலத்தில்!
இப்படி, எத்தனை எத்தனையோ சமூக சீர்கேடுகள் மற்றும் அவலங்களைக் கொண்டதுதான் தமிழ்நாடு.
ஆனாலும், இதைப் பெரியார் மண்… பெரியார் மண்! என்று எதற்காக பெருமை பீற்றிக்கொண்டே திரிகிறார்கள் பலர் என்று கேட்டால், அதற்கும் சில காரணங்கள் இல்லாமலெல்லாம் இல்லை.
இந்தியாவிலேயே, தமிழகத்தில் மட்டுமே நடைமுறையிலிருக்கும் அதிகளவான 69% சமூகநீதி இடஒதுக்கீடு. இதன்மூலம், பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி, அனைத்து சமூகங்களின் மத்தியிலும் ஓரளவு பரவலாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றமும் கவனிக்கத்தக்கது. இங்கு, கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி உண்டு. அதுமட்டுமின்றி, சாலை வசதிகள், தண்ணீர் வசதிகள் பரவலாக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலும், அணுகுவதற்கு எளிதான வகையில் பள்ளிகள் அமைந்திருப்பதால், அனைத்து சாதி மக்களும் கல்விப் பெறுவதற்கு ஏதுவாகிறது. அரசியல் என்பது இங்கே ஓரளவு ஜனரஞ்சகமயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு மிகவும் மேம்பட்டது. தமிழகத்தில், உயர்கல்வி நிறுவனங்களும் மிக அதிகம்!
தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து அமைப்பு நன்கு மேம்பட்டுள்ளது. இங்கு நகர்ப்புற வளர்ச்சி, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிக அதிகம். இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தொழில்துறையில் முன்னேறிய ஒன்றாக இருக்கிறது தமிழ்நாடு! தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றமும் ஒப்பீட்டளவில் பாராட்டத்தக்கதாக உள்ளது.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சனாதன எதிர்ப்பு மற்றும் நாத்திகவாத பிரச்சாரங்களை வெளிப்படையாக மற்றும் தைரியமாக மேற்கொள்ளலாம்.
ஆக மொத்தத்தில், நாட்டின் பிற மாநிலங்களைவிட, சமூகப் பொருளாதார காரணிகள் பலவற்றில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்தான்!
ஆனால், இந்த அளவுகோலை மட்டுமே வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டை ‘பெரியார் மண்’ என்று கூறிவிட முடியுமா? என்றால் நிச்சயமாகக் கூடாத செயல் அது!
பெரியாரின் சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, சமூக நீதி உள்ளிட்ட பல கருத்துகள் மிகவும் ஆழமானவை மற்றும் அற்புதமானவை. ஆனால், அவரின் நீண்ட நெடியப் போராட்டங்களின் வழி, தமிழ்நாடு எந்தளவிற்கான சிந்தனை மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது என்பதை ஆராய்வது மிக மிக அவசியமானது!
அப்படி ஆராய்ந்தால், தமிழகத்தின் சிந்தனை மாற்றம் என்பது ஏமாற்றமளிக்கும் வகையிலேயே இருக்கிறது. ‘பெரியார் மண்’ என்ற தகுதியைப் பெறுவதற்கு, தமிழ்நாடு செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
எனவே, இது பெரியார் மண், இங்கெல்லாம் சனாதனம் எடுபடாது என்ற சவால்கள் பல நேரங்களில் பொருந்துவதில்லை என்பதே நம் கருத்து! ஏனெனில், சனாதனம் உள்ளிட்ட பல மூடத்தனங்கள், இங்கு பல நூற்றாண்டுகளாக கலந்து கரைந்து புரையோடிப் போயிருக்கின்றன!
– மதுரை மாயாண்டி