டில்லி

நாட்டின் மதிப்பை காக்க தாம் எதையும் தியாகம் செய்ய தயாராக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவி சோனியா காந்தி போட்டி இட்டார்.  அவரை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் நிறுத்தப்பட்டார்.     பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங் ஐ சோனியா காந்தி 1.67 லட்சத்துக்கு மேலான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தன்னை வெல்ல வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், “ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் என் மீது நம்பிக்கை அளித்து வெற்றி பெற செய்தீர்கள்.   அதையே இந்த தேர்தலிலும் செய்தமைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது நன்றிகள்.

அது மட்டுமின்றி  எனக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாத சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் நண்பர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.    இனி வரும் நாட்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதை அறிவேன்.  ஆயினும் உங்கள் ஆதரவால் நான் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளேன்.   இதன் மூலம் கங்கிரஸ் கட்சி அனைத்து சவாலையும் ஏற்க தயாராக உள்ளது.

எனது வாழ்க்கை என்பது திறந்த புத்தகமாக உள்ளது.  உங்களைப் போன்ற இந்நாட்டு மக்களே  எனது குடும்பத்தினர் ஆவார்கள்.    இந்த நாட்டின் மதிப்பையும் நமது காங்கிரஸ் கட்சியின் முன்னோர்களின் கலாசாரத்தையும் காக்க நான் எதையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன்.  இதிலிருந்து என்றும் பின்வாங்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.