ண்டிகர்

போரை தவிர்க்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை  அந்நாடு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறி உள்ளார்.

கடந்த மாதம் மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.   மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.  அந்தப் பகுதியில் ஏராளமான ராணுவத்தினர்  பாதுகாப்புக் கருதி குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வதந்தி பரவாமல் தடுப்பதாகக் காரணம் காட்டி மத்திய அரசு தொலைத் தொடர்பு, இணையச் சேவை ஆகியவற்றை முடக்கி உள்ளது.    காஷ்மீரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது   காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக பாகிஸ்தான் அரசு பல சர்வதேச அமைப்புக்களிடம் புகார் அளித்து வருகிறது.

இந்நிலையில் சண்டிகர் நகரில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், “மத்திய  அரசின் காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் அந்த மாநிலம் தற்போது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக முழுமையாக இணைந்துள்ளது.

இந்த நடவடிக்கையை மத்திய அரசு  காஷ்மீரின் வளர்ச்சிக்காக எடுத்துள்ளது.  பாகிஸ்தான் காஷ்மீரில் வன்முறைகளைத் தூண்டும் செயலை உடனடியாகக் கைவிட வேண்டும்.   அது மட்டுமின்றி ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு நடந்துக் கொள்வதே பாகிஸ்தானுக்கு நல்லது.   பாகிஸ்தானுக்குப்  போர் வேண்டாம் என்னும் எண்ணம் இருந்தால் தனது நாட்டின் மீது அக்கறை இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் இம்ரான் கான் ஒப்படைக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.