சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி. பொங்கல் பெருவிழாவில் தமிழ்நாடு அரசின் லோகோ பதிவிடுவதை தவிர்த்துள்ள நிலையில், கவர்னர் அலுவலகத்துக்கான செலவினங்களை அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை வலுத்து வருகிறது. இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, தமிழக நிதியமைச்சரை வலியுறுத்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவுக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதேபோல் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் (முத்திரை) இடம் பெறவில்லை, அதற்கு பதிலோக மத்தியஅரசின் லோகோ பதியப்பட்டுள்ளது. ஆனால்,  கடந்தாண்டுக்கான பொங்கல் மற்றும் சித்திரை பெருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றே இடம் பெற்றிருந்தது.

பொதுவாக, மாநிலங்களில் மத்திய அரசால் நியமிக்கப்படும், ஆளுநர்களின் செலவினங்களை மாநில அரசே மேற்கொண்டு வருகிறது. அதன்படி,  தமிழக ஆளுநர் மாளிகை உள்பட அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு செலவழிக்கிறது.  ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.6 கோடிக்கும் மேல் செலவிடப்படுகிறது.  நாட்டிலேயே அதிக அளவில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்காக செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் முத்திரையையும் தவிர்த்துள்ள நிலையில், ஆளுநர் மற்றும் ஆளுநர்  மாளிகைக் கான செலவினை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது, தமிழகஅரசு லோகோ இல்லாத செலவுகளை அனுமதிக்க வேண்டாம்  என்று என்று திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர், மாநில நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனை வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ‘டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழ்நாடு கவர்னர் முதிர்ச்சி இல்லாமல் தமிழ்நாடு அரசின் இலச்சினையை தவிர்த்துள்ளார்.  #TNGovt 6 கோடிக்கும் அதிகமாக (நாட்டிலேயே அதிகம்) கவர்னர் அலுவலகத்திற்கு செலவிடுகிறது! மாண்புமிகு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன்,  இதை கவனத்தில் கொள்ள வேண்டும் & மாநிலங்களின் பெயர் அல்லது சின்னம் இல்லாத செலவுகளை அனுமதிக்க வேண்டாம்!! என கேட்டுக்கொண்டுள்ளார்.