சென்னை:  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் நடைபெறும்  பொங்கல் பெருவிழா அழைப்பிதழில், தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடுஅரசு லோகோவை தவிர்து, மத்தியஅரசின் லோகோவை பதிவிட்டுள்ளார். இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆளுநரின் செயலுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 12 ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழகஅரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த சிலநாட்களுக்கு முன்பு தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில்,  திராவிடம் போன்ற வார்த்தைகளையும் வாசிப்பதை தவிர்த்தார். இது சர்ச்சையானது.

இந்த நிலையில், இன்று தற்போது தமிழ்நாடு ஆளுநர்  ரவி, வெளியிட்டுள்ள பொங்கல் பெருவிழா அழைப்பிதழில்,   தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதேபோல் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் (முத்திரை) இடம் பெறவில்லை, அதற்கு பதிலாக மத்திய அரசின் இலச்சினை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால்,  கடந்தாண்டுக்கான பொங்கல் மற்றும் சித்திரை பெருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றே இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்த ஆண்டு அது தவிர்க்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி., சு.வெங்கடேசன், கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்.இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?

மேலும் ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது. நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.