மலைக்கிராம இளம் பெண்ணின், கடுமையான கல்விப்போராட்டம்…     

Must read

மலைக்கிராம இளம் பெண்ணின், கடுமையான கல்விப்போராட்டம்…

ஆனைமலை வட்டம், தம்மம்பதி மலைக்கிராமத்திலிருந்து வெளியுலகம் வந்து படித்து ஒரு நல்ல நிலைக்கு வர ஆசை தான் அனைவருக்கும்.  ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி அன்றாடத்தேவைகளுக்கே போராடும் இவர்களில் ஓரிருவர் மட்டுமே அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து தான் விரும்பிய கல்வியைக் கற்று  அடுத்த நிலைக்குச் செல்கின்றனர்.

அவர்களில் ஒருவர் தான் அ. ஜெயா.  பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில, பிஏ – வரலாறு மூணாவது ஆண்டு படிக்கிறார்.

“எங்க மலைகிராம ஆண்கள்ல இது வரைக்கும் ஒரேயொரு அண்ணன் தான் பி.காம். முடிச்சிருக்காங்க. பெண்கள்ல ஒரு அக்கா நர்ஸிங் முடிச்சுட்டு வேலைக்குப் போறாங்க.  நானும் விமலா என்கிற பெண்ணும் நான் காலேஜ் போறோம். 90 குடும்பங்களுக்கு மேல இருக்குற எங்க கிராமத்துல கல்வி வளர்ச்சி இவ்வளவுதான்.  இதுக்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாதது, ஜாதி சான்றிதழ் கிடைக்கிறதுல சிக்கல்னு பல காரணங்கள் இருக்கு” என்று விளக்குகிறார்.

அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து கிளம்பி 6:30 மணிக்கு பேருந்தைப் பிடித்து 8:00 மணிக்கு காலேஜுக்கு வந்துவிடுகிறார். வீட்டிலிருந்து கொண்டு வந்த காலை சாப்பாடு 9:00 மணிக்கு. மதியமும் அதேதான்.  மாலை 4:00 மணி பேருந்து மூலமாக சரளபதியில இறங்கி யானைகள், காட்டுப்பன்றிகள் நடமாடும் காட்டு வழியாக 4 கிமீ நடந்து 6:30 மணிக்கு வீட்டை அடைகிறார்.  விடுமுறை நாட்களில் பெற்றோருடன் காட்டு வேலைக்குச் செல்கிறார்.  இதுதான் இவரது அன்றாட வாழ்க்கை.

அரசாங்கத்தால், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் இருக்கிறார் ஜெயா. உணவு அருந்தவும், உறங்கவும் திண்ணை. வீட்டின் மேற்கூரையில், கான்கிரீட் பூச்சு உதிர்ந்த இடங்களில் இரும்பு கம்பிகள் துருத்தி தெரிகின்றன. மழை நேரங்களில் ஒழுகும் மேற்கூரை.

மேற்படிப்பு பயில இவருக்கு ஆசையிருப்பினும், வெளியூர்களுக்குச் சென்று படிக்க வீட்டின் பொருளாதாரம் ஒத்துழைக்காது. திருமூர்த்திமலை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை நம்பியிருந்தவர், அது மூடப்பட்டதை பெரும் பின்னடைவாக எண்ணி வருந்துகிறார்.

கல்வியே ஒருவரை, அவரது வாழ்வை மேம்படுத்தப் பெரிதும் உதவும் ஒரு காரணியாக இருக்கும் சூழலில், அதை அடையவே இங்கே பலர் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருப்பது நமது சமுதாயக்கோளாறுகளில் ஒன்றாகும்.

-லெட்சுமி பிரியா

More articles

Latest article