ட்டி

மிழக மருத்துவ அமைச்சர் மா சுப்ரமணியன் ஜூன் இறுதிக்குள் தமிழகத்துக்கு 37 லட்சம் தடுப்பூசிகள் வரும் என அறிவித்துள்ளார்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதையொட்டி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் அரசு சார்பில் பல இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது.   ஒரு சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிறது.

அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் அனைத்து சிற்றூர்களிலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.    நேற்று மசினகுடி மற்றும் செம்ம நத்தம் உள்ளிட்ட சிற்றூர்களில் முகாம் நடந்தது.  இந்த முகாமை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

அவர் தனது உரையில், “பழங்குடியினர் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு சென்று தடுப்பூசிகள் போடப்படுகின்றன.   ஜூன் மாத இறுதிக்குள் 100% பழங்குடி இன மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது என்னும் நிலையை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும்.

தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன.   எனவே தடுப்பூசிகள் கிடைத்த உடன் அவற்றை அனைத்து பகுதிகளுக்குப்  பிரித்து அனுப்பி வருகிறோம்.  அதனால் சிறிது தாமதம் நேரிடுகிறது.  தமிழகத்துக்கு ஜூன் மாத இறுதிக்குள் 37 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி வரும்”  எனத் தெரிவித்துள்ளார்.