டில்லி

ந்தியச் சுகாதார ஊழியர்களிடையே நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக திறன் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதைக் கட்டுப்படுத்த ஒரே வழி கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.     இந்திய அரசு தற்போது மூன்று நிறுவன தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.    இதில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இன்னும் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கவில்லை.   இது ரஷ்யத் தயாரிப்பாகும்.   கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்கின்றனர்.   முதல் கட்டமாக மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டுமே போடப்பட்டன.

இவ்வாறு தடுப்பூசி போடப்பட்ட சுகாதார ஊழியர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர் உள்ளிட்டோரிடம் கொரோனா எதிர்ப்புச் சக்தி எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.  இவர்கள் அனைவருக்குமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இவர்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடிகள் உற்பத்தி அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவில், “இரு டோஸ்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட 305 ஆண் மற்றும் 210 பெண்கள் ஆகிய 515 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.  இதில் 425 பேர் கோவிஷீல்ட் மருந்தைப் போட்டுக் கொண்டவர்கள் மற்றும் 90 பேர் கோவாக்சின் மருந்தைப் போட்டுக் கொண்டவர்கள் ஆவார்கள்.,  கோவிஷீல்ட் போட்டுக் கொண்டவர்களிடம் 98.1% ஆண்டிபாடி உற்பத்தியும் கோவாக்சின் போட்டுக் கொண்டவர்களிடம் 80% உற்பத்தியும் காணப்பட்டது.

இந்த ஆய்வில் ஆண் பெண் ஆகியோரிடையே ஆண்டிபாடிகள் உற்பத்தியில் எவ்வித வித்தியாசமும் இல்லை.  இதைப் போல் இரத்த குரூப், வயது போன்றவற்றின் அடிப்படையிலும் எவ்வித வித்தியாசமும் தெரியவில்லை.    இரு மருந்துகளிலுமே சிறிய அளவில் மட்டுமே எதிர்விளைவுகள் தென்பட்டுள்ளன.  மொத்தத்தில் இரு தடுப்பூசிகளுமே நல்ல திறன் உள்ளதாகவும் கோவிஷீல்ட் அதிக திறன் உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.