சென்னை
தமிழக மாணவர்களுக்குப் பள்ளி நேரம் முடிந்த பிறகு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக அதிகரித்ததால் தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் 1 முதல் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகளும் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், “தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் குறைவாக உள்ளது. எனவே பள்ளி நேரத்துக்குப் பின்பு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.