சென்னை: தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் சார்பில் வரும் 10ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தனியார் பள்ளிகளைத் திறக்காமல், மாணவர் சேர்க்கை நடத்தாமல், புதிய, பழைய கட்டணத்தை வசூலிக்காமல், ஆசிரியர்களுக்குச் சம்பளம் தர முடியவில்லை. பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தனியார் பள்ளிகள், 2018 – 19 ஆம் ஆண்டு, இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தில் சேர்த்த, 25 சதவீத மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் 40 சதவீதம் நிலுவையில் உள்ளது. அதேபோல 2019 – 20 ஆம் ஆண்டு கல்விக் கட்டண பாக்கி, முழுமையாக நிலுவையில் உள்ளது. இதை, அரசு உடனடியாக வழங்கினால் கூட, தனியார் பள்ளிகள் சமாளிக்க முடியும்.
இத்துடன் பள்ளி வாகனங்களுக்கு வரி ரத்து, தொடர் அங்கீகாரத்தை நிபந்தனை இல்லாமல் புதுப்பித்தல், ஓராண்டுக்கு, இ.பி.எஃப்., – இ.எஸ்.ஐ., சொத்து வரியிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம்.
கொரோனா சூழலில் தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர்கள் என சுமார் ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதை அரசுக்கு உணர்த்த, வரும் 10-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அவரவர் வீடுகளுக்கு முன் சமூக இடைவெளியுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.