சென்னை

மிழகக் காவல்துறை விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை அமைக்க அனுமதி வழங்க ஒற்றைச் சாளர முறையை அறிமுகம் செய்துள்ளது.

அடுத்த மாதம் 2 ஆம் தேதி நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த சில வருடங்களாக வட இந்தியாவைப் போல் தமிழகத்திலும் பல இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைத்து இந்த விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல  இந்து அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி வருகின்றனர்.

கடந்த ஆண்டு சென்னை நகரில் 2500 இடங்களில் விநாயகர் சிலை  அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த சிலைகள் அமைக்க பல்வேறு துறைகளின் அனுமதியைப் பெற வேண்டும் என விதி இருந்தது. அதாவது காவல்துறை,தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல துறைகளின் அனுமதியைப் பெற வேண்டி இருந்தது. இதில் ஒரு துறையின் அனுமதி பெறவில்லை எனினும் சிலையை அமைக்க முடியாது.

இந்த வருடம் விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி பலர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள்  பல்வேறு துறை அதிகாரிகளைச் சந்தித்து அனுமதி பெறுவதில் சிரமமுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதையொட்டி இன்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அண்ட ஆலோசனைக் கூட்டத்தில் விநாயக சதுர்த்தியின் போது சிலை அமைக்க ஒற்றைச் சாளர முறை அமுல் படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

இதன் மூலம் சிலை வைக்க விரும்புபவர்கள் ஒரே இடத்தில் அனுமதி பெற முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்காகச் சென்னையில் உள்ள 12 காவல்  மாவட்டங்களுக்கு 12 காவல் அதிகாரிகள் பொறுப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிலை வைக்க விரும்புவோர் அந்தந்த பகுதி அதிகாரிகளிடம் மனு அளித்தால் அவர் அனைத்து அனுமதியையும் பெற்றுத் தர உள்ளார்.