சென்னை:  சென்னை ஐபிஎல் சூதாட்ட கும்பலிடம், 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்த உளவுத்துறை அதிகாரிகள், சூதாட்ட கும்பல்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளை வைத்து சூதாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே ஐபிஎல் சூதாட்டம் காரணமாக, சிஎஸ்கே அணி சில ஆண்டுகள் சஸ்பெண்டு செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதும் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், கர்நாடகா மாநிலத்தில், ‘ஆன்லைன்’ கிரிக்கெட் சூதாட்டத்தில், 1.50 கோடி ரூபாயை கடன் வாங்கி இழந்த அரசு அதிகாரி தர்ஷன் பாலு என்பவரின் மனைவி தற்கொலை செய்து இறந்தார். தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும், கிரிக்கெட் சூதாட்ட கும்பல் சிக்கியது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது குறித்து தகவல் அறிந்த உளவுத்துறை அதிகாரிகள், அந்த கும்பலிடம் பணம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து தெரிய வந்துள்ளது. சூதாட்டம்  குறித்து விசாரணை நடத்த வேண்டிய உளவுத்துறை அதிகாரிகள்,  சென்னையில் செயல்பட்டு வரும்  கிரிக்கெட் சூதாட்ட கும்பலிடம் ரூ.2 கோடி வசூலித்து, நடவடிக்கை எடுக்காமல் இருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை  தலைமை காவலர் மற்றும் எஸ்.ஐ., குறித்து விசாரணை நடக்கிறது. பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சென்னை உள்பட மாநிலம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து புகார் அளிக்கப்பட்டாலும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்து வரும் காவல்துறையினரின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது,  ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட கும்பலிடம், 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்து ஏப்பம் விட்ட  உளவுத்துறை  அதிகாரிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது சென்னை காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான விசாரணையில்,  வடசென்னை பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் சூதாட்ட கும்பல்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.  இந்த கும்பல் குறித்து உளவுத்துறை தலைமை காவலர் ஒருவருக்கு தெரியவந்துள்ளது. அவரும், இதே துறையில் பணிபுரியும் எஸ்.ஐ., ஒருவரும், கிரிக்கெட் சூதாட்ட கும்பலுடன் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து, சிறுக சிறுக, 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

சர்ச்சையில் சிக்கியுள்ள தலைமை காவலர் மற்றும் எஸ்.ஐ., ஆகியோர் ஒரே இடத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே, ஹவாலா பண பரிமாற்ற கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, தலைமை காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, அவரும், எஸ்.ஐ.,யும் கிரிக்கெட் சூதாட்ட கும்பலிடம், கோடிக்கணக்கில் வசூலித்த புகாரில் சிக்கியுள்ளனர். இருவரும் கிரிக்கெட் சூதாட்ட கும்பலுடன் எத்தனை முறை தொடர்பு கொண்டனர் என்ற விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.