சென்னை: தமிழ்நாட்டில் வரும் வெள்ளிக்கிழமை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தி.மு.க.வினரின் செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக,  தேர்தல் ஆணையத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணிக்கு சவால் விடுக்கும் வகையில், அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணிகள் மும்முரமாக தேர்தல் பணி யாற்றி வருகின்றன. இதனால் அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்து நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் கடைசிநேர பிரசார பரபரப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரித்துறை மூலமாக ஒட்டு கேட்கப்படுவதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்துள்ளார்.

அவரது  புகாரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத செயலில் மத்திய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.